பக்கம் எண் :

750என் சரித்திரம்

என்று இந்திரனை நோக்கி அவன் சொல்லும் வார்த்தைகளில் அமைந்த
பொருளாழத்தை நினைந்து நினைந்து மகிழ்ந்தேன்.

ரங்காசாரியர் ஒன்றரை வருஷ காலம் கும்பகோணத்தில் இருந்தார்.
நாள் தவறாமல் அவரிடம் சென்று அவர் சொல்லும் பௌத்த மதக்
கருத்துக்களைக் குறித்துக் கொண்டு வந்தேன். அதன் பிறகு அவரைச்
சென்னைக்கு மாற்றி விட்டார்கள். அவர் சென்னைக்குப் புறப்படும் பொழுது,
“இந்தப் புத்தகத்தை நீங்கள் விரைவில் பதிப்பித்து வெளியிடுங்கள்; இது
மாணிக்கத்தைப் போல அருமையானது” என்றார்.

“தாங்கள் சென்னைக்குப் போவதனால் மணிமேகலையின் சம்பந்தம்
உங்களை விடாது. அங்கேயும் வந்து தங்களுக்குச் சிரமம் கொடுப்பதை நான்
விடப்போவதில்லை” என்றேன் நான்.

“அப்படியானால் நான் மிகவும் பாக்கியம் செய்தவனே” என்று அவர்
தம் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொண்டார். அவர் உள்ளத்தில்
மணிமேகலையிற் கண்ட அரிய வரலாறுகளும் இனிய பகுதிகளும் குடி
கொண்டன.

அத்தியாயம்-121

மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம்

மேல் நாட்டில் எனக்கு நண்பரானவர்களில் ரெவரெண்ட் ஜி. யூ. போப்
ஒருவர். அவர் பல காலம் தமிழ் நாட்டில் இருந்தவர். தமிழில் சிறுவர்களுக்குப்
பயன்படும் வண்ணம் சிற்றிலக்கணம் ஒன்று எழுதியிருக்கிறார். ‘போப்பையர்
இலக்கணம்’ என்ற பெயரோடு தமிழ் நாட்டில் அது வழங்கியது.
திருவாசகத்தையும் நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவர்
வெளியிட்டிருக்கிறார். ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிடியில் தமிழ்ப் பேராசிரியராக
அவர் இருந்து வந்தார்.

ஒரு சமயம் பூண்டி அரங்கநாத முதலியாரிடம் பேசிக் கொண்
டிருந்தபோது போப்பினுடைய பிரஸ்தாவம் வந்தது. அப்போது முதலியார்,
“அவர் பதிப்பித்த நாலடியார் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் உழைத்துப்
பல குறிப்புக்களை எழுதியிருக்கிறார். தங்கள் சீவகசிந்தாமணிப் பதிப்பைப்
பற்றியும் அதில் பாராட்டி எழுதியிருக்கிறார்” என்று சொல்லித் தம்மிடமிருந்த
பிரதியைக் கொடுத்தார்.