பக்கம் எண் :

752என் சரித்திரம்

அடுத்தபடி புறப்பொருள் வெண்பாமாலைப் பிரதி ஒன்றை அவருக்கு
அனுப்பினேன். அதைப் பெற்றவுடனே பின் வரும் கடிதத்தை
எழுதியனுப்பினார்.

“பேலியல் காலேஜ்” ஆக்ஸ்போர்டு. 21-10-1895

“, , , , தாங்க ளனுப்பிய புறப்பொருள் வெண்பா மாலைக்காக நன்றி
பாராட்டுகிறேன். அதன் பிரதி ஒன்று எங்கள் தமிழ்ப் புத்தகசாலையில்
இருக்கிறது. அதைப் படித்து முடிக்க முயன்றேன்.

நானும் எவ்வளவோ திட்டம் போடுகிறேன்; ஆனால் நீங்கள் இளைஞர்,
நான் கிழவன்-

‘ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.’

நான் மிகவும் அசௌக்கியமாக இருந்தேன்; ஆயினும் இன்னும்
ஏதேனும் செய்யலாமென்று நம்பியிருக்கிறேன்..,,,,,உங்கள் பதிப்பு திருத்தமாகவும்
பூர்ணமாகவும் இருக்கிறது. பழந்தமிழ் நூல்களெல்லாம் புதுத் தமிழர்களுக்கு
விளங்கும்படி செய்ய வேண்டும். அதற்கு வழி செய்யுங்கள்,,,,,,”

இக் கடிதத்தில் திருக்குறட் செய்யுளைத் தமிழிலே எழுதியிருந்தார்.
அவர் எழுத்துக்களிலே நடுக்கமும் வார்த்தைகளிலே தேக அசௌக்கியத்தைக்
காட்டும் குறிப்பும் இருந்தன. ‘ஒரு பொழுதும் வாழ்வ தறியார்’ என்ற
அருமைத் திருக்குறளை அவர் எழுதுகையில் அவரது மனநிலை எப்படி
இருந்திருக்குமென்று யோசித்துப் பார்த்தேன். எவ்வளவோ காரியங்களைச்
செய்யவேண்டுமென்ற ஆசையோடு உழைத்து வரும்போது இடையிலே
வாழ்க்கை முடிந்து விட்டால் என் செய்வதென்ற பயம் அவர் நெஞ்சில்
இருப்பதை அக்குறள் வெளிப்படுத்தியது. அவர் இன்னும் பல வருஷங்கள்
வாழ வேண்டுமென்று வாழ்த்தினேன்.

நல்ல வேளையாக அவரது தேக அசௌக்கியம் மாறியது. முதுமைத்
தளர்ச்சியிருந்தாலும் தமிழாசை அவர் உடம்பில் ஒரு புதிய முறுக்கை
ஏற்றியிருக்க வேண்டும். 1896-ஆம் வருஷ ஆரம்பத்தில் அவர் மீட்டும்
எனக்குக் கடிதம் எழுதினார்.