பக்கம் எண் :

78என் சரித்திரம்

சிவ பக்தர். விரிவாகச் சிவ பூஜை செய்பவர். பூஜையின் இறுதியில்
வீணையில் சில ஸ்தோத்திரங்களைப் பாடி உருகுவார் அவ்வாறு பூஜா
காலத்தில் அவர் மனமொன்றிப் பாடும் கீர்த்தனங்களைக்கேட்பதற்குப் பலர்
காத்திருப்பார்கள்.

சடகோபையங்கார் அவர் பூஜையைத் தரிசனம் செய்யச் சென்றார்.
அவருடைய பக்தியையும் பூஜா விதானங்களையும் பார்த்தபோது அவரிடம்
அதிக அன்பு உண்டாயிற்று. பூஜையின் முடிவில் ஸாம்பையர் வீணையை
எடுத்து வாசித்தார். சகானா ராகத்தை ஆலாபனம் செய்தார். சடகோபையங்கார்
அதிலே கரைந்து நின்றார்.

“மகா தேவா மகா தேவா”

என்ற பல்லவியை அவர் தொடங்கினார். மனத்தைப் பலவேறு
திசைகளில் இழுத்துச் செல்லும் பொருள் அந்தப் பல்லவியில் இல்லை.
இறைவன் திருநாமம் மாத்திரம் இருந்தது. வெறும் இராகத்தில் ஓர் இனிமை
இருந்தாலும் அதில் தூய்மையான அந்த நாம சப்தத்தின் இணைப்பு அந்த
இனிமைக்கும் ஓர் இனிமையை உண்டாக்கிற்று. சகானா ராகமும் மகாதேவ
சப்தமும் வீணா கானத்தில் இழைந்து ஒன்றி மனத்தைச் சிவானந்த விலாசத்திற்
பதிய வைத்தன. மேலும் அந்த வித்துவான்

“சங்கர சங்கர சங்கர சங்கர
சங்கர சங்கர சங்கர சங்கர
மகா தேவா”

என்பதைப் பக்தியில் தோய்ந்த உள்ளத்திலிருந்து உருகிவரும்
இன்னிசையிலே எழுப்பினார். இராகமும் நாம சப்தமும் ஒருபடி உயர்ந்து
நின்றன. சடகோபையங்கார் அந்த இன்பத்தில் ஊறி இசையும் பக்தியும் ஒன்றிக்
கலந்த வெளியிலே சஞ்சாரம் செய்தார். அதிலிருந்து இறங்குவதற்குச் சிறிது
நேரம் ஆயிற்று. கண்ணில் நீர் வர ஸாம்பையரை வணங்கினார்.

அன்றைய அனுபவம் சடகோபையங்காரைச் சும்மா இருக்கவிடவில்லை.
அந்தச் சகானா ராகமும் கீர்த்தனத்தின் மெட்டும் அவர் நினைவில் பசுமையாக
நின்றன. அந்த மெட்டிலே அவரும் ஒரு கீர்த்தனம் பாடினார். அதுவே,
“ரவிகுல தாமனே” என்ற பாட்டு

இந்த வரலாற்றை அவர் சொல்லி விட்டுக் கீர்த்தனத்தைப் பாடினார்.
பாடும்போது பழைய ஞாபகங்கள் அவருக்கு வந்தன.