பக்கம் எண் :

என் முன்னோர்கள் 9

அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும்
அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை
மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப்
பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம்.

இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய
தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக
இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற்
சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்
தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட
ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப்
பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய
சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள்.

அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக
வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும்
பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற்
பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்ட
ஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப்
பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல
இடங்களில் இருந்து வருகின்றனர்.

இந்த வகுப்பிலும் மூன்று பிரிவுகள் உண்டு. அத்தியூர், அருவாட்பாடி,
நந்திவாடி என்னும் ஊர்களின் பெயரால் அப் பிரிவுகள் வழங்கப்பெறும்.
நந்திவாடி யென்பது இன்னவூரென்று இப்போது தெரியவில்லை.
அவ்வூரிலிருந்த பிரிவினர் இக்காலத்தில் தேப்பெருமாள் நல்லூர், திருவையாறு
முதலிய இடங்களில் இருக்கின்றார். அருவாட்பாடி என்பது மாயூரத்திற்கு
வடகிழக்கே மூன்று மைல் தூரத்தில் திருக்குறுக்கை யென்னும் ஸ்தலத்துக்குப்
போகும் மார்க்கத்திலும், திருநீடூரென்னும் ஸ்தலத்துக்கு அருகிலும் உள்ளது;
அருவாப்பாடி என்று இப்போது வழங்கி வருகிறது. அருவாளர் என்ற ஒரு
கூட்டத்தினருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காணப்படுகின்றது.
அருவாப்பாடி அவர்கள் இருந்த இடமாக இருத்தல் கூடுமென்று
எண்ணுகிறேன். அங்கிருந்த அஷ்ட ஸகஸ்ரத்தினர் கிடைத்த தொழில்களைப்
பெற்று ஜீவித்து வந்தார்கள்.

அத்தியூரென்பது தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ளது. அதில்
உள்ளவர்கள் சாஸ்திர ஞானமும் வைதிக ஒழுக்கமும் தெய்வ