பக்கம் எண் :

190சத்திய சோதனை

Untitled Document
அங்கீகரித்திருப்பார்.   இவ்வரி    25 பவுனிலிருந்து   3 பவுனுக்குக்
குறைக்கப்பட்டதற்குக் காங்கிரஸ் செய்த கிளர்ச்சி ஒன்றே காரணமாக
இருந்திருக்கக் கூடும்.      ஆனால்,    நான் அவ்வாறு எண்ணுவது
தவறாகவும் இருக்கலாம். காங்கிரஸின் எதிர்ப்பைக் கவனிக்காமலேயே
இந்திய அரசாங்கம்    ஆரம்பம் முதற்கொண்டே 25 பவுன் வரியை
ஏற்க   மறுத்து, அதை 3 பவுனுக்குக் குறைத்திருக்கவும் கூடும். அது
எப்படி இருந்தாலும்,    இந்திய அரசாங்கத்தைப் பொறுத்த வரையில்,
இது         நம்பிக்கைத் துரோகமாகும்.    இந்தியாவின் நலனைப்
பாதுகாப்பதற்குப்   பொறுப்பாளியான வைசிராய், மனிதத் தன்மையே
இல்லாததான இந்த வரியை அங்கீகரித்திருக்கவே கூடாது.

     அவ் வரி    25 பவுனிலிருந்து 3 பவுனாகக் குறைந்ததை, நான்
அடைந்த       பெரிய         வெற்றி என்று  காங்கிரஸ் கருதிக்
கொள்ளுவதற்கில்லை. இந்திய ஒப்பந்தத் தொழிலாளியின் நலன்களை
முற்றும் பாதுகாவாது போனதைக்குறித்துக் காங்கிரஸு க்கு  வருத்தமே
இருந்தது. அந்த வரி    ரத்து செய்யப்பட்டுவிட வேண்டும் என்பதே
எப்பொழுதும் காங்கிரஸின் உறுதியான கொள்கையாக இருந்து வந்தது.
ஆனால், அந்தக் கொள்கை நிறைவேறுவதற்கு   இருபது ஆண்டுகள்
ஆயின. அப்படி அவ்வரி ரத்தானதற்கு, நேட்டால் இந்தியர் மாத்திரம்
அல்லாமல்,       தென்னாப்பிரிக்க   இந்தியர் எல்லாருமே சேர்ந்து
பாடுபட்டதே காரணம்.  காலஞ் சென்ற        ஸ்ரீ கோபாலகிருஷ்ண
கோகலேயிடம் கொடுத்திருந்த   வாக்குறுதி மீறப்பட்டதன் காரணமாக,
முடிவான   ஒரு   போராட்டத்தையே     நடத்த வேண்டியதாயிற்று.
அப்போராட்டத்தில்       இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் முழுப்
பங்கும் எடுத்துக் கொண்டனர். அதிகாரிகள் சுட்டதனால், அவர்களில்
சிலர் உயிரையும் இழந்தனர் ;     பத்தாயிரத்திற்கு அதிகமானவர்கள்
சிறைத் தண்டனையும் அனுபவித்தார்கள்.

     ஆனால்,       முடிவில்  சத்தியம் வெற்றி பெற்றது. இந்தியர்
அனுபவித்த துன்பங்களில் அந்தச் சத்தியம் பிரதிபலித்தது.என்றாலும்,
தளராத நம்பிக்கையும்,மிகுந்த பொறுமையும், இடைவிடாத முயற்சியும்
இல்லாதிருக்குமாயின்    அது வெற்றி பெற்றிருக்க முடியாது. சமூகம்,
போராட்டத்தை நடத்தாமல் விட்டிருந்தால்,  காங்கிரஸ் கிளர்ச்சியைக்
கை விட்டு,  வரி    தவிர்க்க முடியாத ஒன்று      எனப் பணிந்து
போயிருக்குமாயின்,    வெறுக்கப்பட்ட  அந்த வரி     இன்றளவும்
வசூலிக்கப்பட்டு    வந்திருக்கும்.  தென்னாப்பிரிக்க  இந்தியருக்கும்,
இந்தியா    முழுமைக்குமே அது நிரந்தரமான     அவமானமாகவும்
இருந்திருக்கும்.