பக்கம் எண் :

273

Untitled Document
இளைஞர்கள் இதை உணருவதில்லை. காங்கிரஸ் பிறந்ததில் இருந்தே
நான் அதை அறிவேன். உண்மையில், காங்கிரஸைத் தோற்றுவித்ததில்
ஸ்ரீ ஹியூமுடன்    எனக்கும் சிறிதளவு பங்கு உண்டு” என்றார், ஸ்ரீ
கோஷால்.

     இவ்வாறு நாங்கள் சிறந்த நண்பர்களானோம்.  மத்தியானத்தில்
தம்முடன் சாப்பிடுமாறு அவர் என்னை வற்புறுத்தி வந்தார்.

     ஸ்ரீ கோஷாலின் சட்டைக்கு அவருடைய வேலைக்காரன் தான்
பித்தான் போட்டுவிடுவது வழக்கம்.   அப் பணியாளின் வேலையை
நான் செய்ய முன்வந்தேன்.       பெரியவர்களிடம் எப்பொழுதுமே
எனக்கு அதிக மரியாதை உண்டு.   ஆகையால் இப்பணியை செய்ய
நான் விரும்பினேன். இதை      ஸ்ரீ கோஷால் அறிய நேர்ந்தபோது,
அவருக்குத் தொண்டாக இது போன்ற      சிறு காரியங்களை நான்
செய்வதை அவர் ஆட்சேபிக்கவில்லை. உண்மையில் இதற்காக அவர்
மகிழ்ச்சியே அடைந்தார். தம் சட்டைக்குப் பித்தான் போடச் சொல்லி
அவர் என்னிடம், “பாருங்கள், காங்கிரஸ்     காரிய தரிசிக்குத் தமது
சட்டைக்குப் பித்தான்     போட்டுக்கொள்ளக் கூட  நேரம் இல்லை.
அவருக்கு எப்பொழுதும்       ஏதாவது வேலை இருந்து கொண்டே
இருக்கிறது” என்பார். அவருடைய      கபடமில்லாத பேச்சு எனக்கு
வேடிக்கையாகத்தான்  இருந்ததேயன்றி, அப்படிப் பட்ட சேவைகளில்
எனக்கு வெறுப்பை உண்டாக்கிவிடவில்லை. இத்தகைய சேவையினால்
நான் அடைந்த நன்மை அளவிட முடியாதது.

     சில        தினங்களுக்குள்,    காங்கிரஸின் நடைமுறையைப்
பற்றியெல்லாம்          தெரிந்துகொண்டு விட்டேன். தலைவர்களில்
பெரும்பாலோரைச் சந்தித்தேன். கோகலே,     சுரேந்திரநாத் போன்ற
பெருந்தலைவர்களை அருகில்         இருந்தும் பார்த்தேன். நேரம்,
அநியாயமாக           வீணாக்கப்படுவதையும் கவனித்தேன். நமது
காரியங்களில்    ஆங்கில மொழி வகித்துவரும் பிரதான ஸ்தானத்தை
அன்றுகூட வருத்தத்துடன் கவனித்தேன்.     சக்தியை வீணாக்காமல்
இருக்க வேண்டும் என்று யாருமே      கவலைப்படவில்லை. ஒருவர்
செய்யக்கூடிய வேலையைப் பலர் செய்தனர்.       முக்கியமான பல
வேலைகளைக் குறித்து யாருமே சிரத்தை   எடுத்துக்கொள்ளவில்லை.

     இவ்வாறு என் மனம் குறைகளைக் கவனித்துக் கொண்டிருந்தது.
என்றாலும் பிறர் கஷ்டங்களை உணரும் சுபாவமும்   எனக்கு உண்டு.
ஆகவே, இருந்த நிலைமையில் இதற்கு   மேல் நன்றாகச் செய்திருக்க
முடியாது என்று எப்பொழுதும் நான்    எண்ணிக் கொள்வேன். எந்த
வேலையையும் குறைவாக மதிப்பிட்டுவிடும் துர்க்குணத்திலிருந்து இந்த
இயல்பே என்னைக் காத்தது.