பக்கம் எண் :

காங்கிரஸில்275

Untitled Document
     “நீங்கள் தீர்மானத்தைப் பார்த்தீர்களா?   என்று கேட்டார் ஸர்
பிரோஸ்ஷா.

     “பார்த்தேன்”.

     “அது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”

     “மிக நன்றாகவே இருக்கிறது.”

     “அப்படியானால், அதை      எடுத்துக்கொள்ளுவோம். காந்தி,
அதைப் படியும்.”

     நான் நடுங்கிக்கொண்டே அதைப் படித்தேன். கோகலே அதை
ஆமோதித்தார். “ஏகமனதாக நிறைவேறியது”     என்று எல்லோரும்
கூவினார்கள்.

     “காந்தி, இத் தீர்மானத்தின்மீது நீர்        ஐந்து நிமிட நேரம்
பேசலாம்” என்றார், ஸ்ரீ வாச்சா.

     இந்த நடைமுறை எனக்குக்     கொஞ்சம்  திருப்தியளிக்கவே
இல்லை. தீர்மானத்தைப் புரிந்துகொள்ள யாருமே கவலைப்படவில்லை.
ஒவ்வொருவரும் போவதற்கு    அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
இத் தீர்மானத்தைக்        கோகலே பார்த்து விட்டார் என்பதனால்
மற்றவர்கள் அதைப்         பார்க்க வேண்டியதோ, புரிந்துகொள்ள
வேண்டியதோ அவசியம் என்று எண்ணவில்லை!

     காங்கிரஸில் நான் செய்யவேண்டிய   பிரசங்கத்தைப் பற்றியே
காலையில் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.    ஐந்து நிமிடங்களில்
நான் எதைச் சொல்லுவது?     ஓரளவுக்கு நன்றாகவே நான் தயார்
செய்துகொண்டிருந்தேன். ஆனால்,       சமயத்தில் சொற்கள் தான்
எனக்கு வருவதில்லை. என் பிரசங்கத்தை    எழுதிப் படிப்பதில்லை;
நினைவிலிருந்தே பேசுவது என்று   முடிவு செய்துகொண்டிருந்தேன்.
பேசுவதற்குத் தென்னாப்பிரிக்காவில்      நான் பெற்றிருந்த ஆற்றல்
அச்சமயம் என்னைவிட்டுப் போய்விட்டதென்றே தோன்றியது.

     என் தீர்மானம் வந்ததும் ஸ்ரீ வாச்சா, என் பெயரைச் சொல்லி
அழைத்தார். நான் எழுந்து நின்றேன்.      எனக்கு தலை சுற்றியது.
எப்படியோ தீர்மானத்தைப்    படித்துவிட்டேன். வெளிநாடுகளுக்குப்
போய்க் குடியேறுவதைப் புகழ்ந்து        ஒருவர் கவி பாடி, அதை
அச்சிட்டுப் பிரதிநிதிகளுக்கு விநியோகம் செய்திருந்தார். அப்பாட்டை
வாசித்துவிட்டுத் தென்னாப்பிரிக்காவில்    குடியேறி இருப்பவர்களின்
குறைகளைப்பற்றிக் குறிப்பிட்டேன்.    அந்தச் சமயத்தில் ஸ்ரீ வாச்சா
மணியை      அடித்தார். நான் ஐந்து நிமிட நேரம் பேசிவிடவில்லை
என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.           இன்னும் இரண்டு
நிமிடங்களே பாக்கி இருக்கின்றன. அதற்குள்         நான் பேச்சை
முடித்துவிட வேண்டும் என்று என்னை எச்சரிக்கை செய்வதற்காகவே
மணி அடிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது.      மற்றவர்கள்
அரை மணி, முக்கால் மணி நேரம் பேசியும் மணியடிக்கப்பட்டதில்லை
என்பதையும் அறிவேன்.