பக்கம் எண் :

336சத்திய சோதனை

Untitled Document
ஆகையால், நான் சுயசரிதையை - இதை எழுதியது  தவறு என்றால்
அத்தவறில் அவர்களும் பங்கு கொள்ளவேண்டும்.

     இனி, தலைப்பில் குறிப்பிட்டிருக்கும்  விஷயத்திற்கு வருவோம்.
என்        குடும்பத்தைச்   சேர்ந்தவர்களாக என்னுடன் இந்தியர்
வசித்துக்கொண்டிருந்ததைப்          போலவே டர்பனில் ஆங்கில
நண்பர்களும் என்னுடன் வசித்துக்கொண்டிருந்தார்கள்.   என்னுடன்
வசித்தவர்கள் எல்லோருக்கும்      இது பிடித்திருந்தது என்பதல்ல.
ஆனால் அவர்கள் என்னுடன் இருக்கவேண்டும்  என்று நான் தான்
வற்புறுத்தினேன். இவ்விதம் செய்தது எல்லோருடைய விஷயத்திலும்
புத்திசாலித்தனமானதாக  முடியவுமில்லை. சிலர் விஷயத்தில் மிகவும்
கசப்பான அனுபவமும் ஏற்பட்டிருக்கிறது.   அவர்களில் இந்தியரும்
உண்டு; ஐரோப்பியரும் உண்டு.         இந்த அனுபவங்களுக்காக
நான் வருத்தப்படவில்லை. இவை போன்றவை   இருந்த போதிலும்,
நண்பர்களுக்கு அசௌகரியங்களையும்       மனக் கவலையையும்
அநேக சமயங்களில் நான் உண்டாக்கி    இருக்கிறேன் என்றாலும்,
என் பழக்கத்தை நான் இன்னும்     மாற்றிக்கொண்டு விடவில்லை.
நண்பர்களும் அன்புடன் என்னைச்        சகித்துக்கொண்டு தான்
வந்திருக்கிறார்கள். புதிதாக வருபவர்களுடன்     எனக்கு ஏற்படும்
தொடர்பு நண்பர்களுக்கு மனவேதனையை   அளிப்பதாக இருக்கும்
போதெல்லாம் அவர்களைக் குறைகூற   நான் தயங்கியதே இல்லை.
தங்களுள் காணும் கடவுளை    மற்றவர்களிடமும் காண வேண்டும்
என்பதை நம்புகிறவர்கள், எல்லோருடனும்    விருப்பு வெறுப்பின்றி
வாழ முடிந்தவர்களாகவும்          இருக்கவேண்டும் என்று நான்
கருதுகிறேன். இத்தகைய        தொடர்புகளுக்குத் தேடாமலேயே
கிடைக்கும் வாய்ப்புகளை       ஒதுக்கித் தள்ளிவிடாமல், சேவை
உணர்ச்சியுடன்              அந்தச் சந்தர்ப்பங்களை வரவேற்று,
அவைகளினாலெல்லாம்          மன அமைதிகெடாமல் பார்த்துக்
கொள்ளுவதன் மூலமே         அவ்விதம் வாழ்வதற்கு வேண்டிய
ஆற்றலைப் பெற முடியும்.

     ஆகையால், போயர் யுத்தம்    ஆரம்பமானபோது என் வீடு
நிறைய ஆட்கள் இருந்தார்கள்          என்றாலும், ஜோகன்னஸ்
பர்க்கிலிருந்து வந்த இரு         ஆங்கிலேயரையும் அழைத்துக்
கொண்டேன். இருவரும்     பிரம்மஞான சங்கத்தினர். இவர்களில்
ஒருவர் ஸ்ரீ கிட்சின்.              இவரைக் குறித்து அதிகமாகத்
தெரிந்துகொள்ளப் பின்னால்         சந்தர்ப்பம் இருக்கும். இந்த
நண்பர்களினால் என்        மனைவி அடிக்கடி கண்ணீர் வடிக்க
வேண்டி வந்தது. துரதிர்ஷ்டவசமாக        என்னால் அவளுக்கு
இதுபோன்ற   சோதனைகள் பல ஏற்பட்டன. ஆங்கில நண்பர்கள்,
குடும்பத்தினர்போல் என்னுடன்    நெருக்கமாக வசிப்பது இதுவே
முதல் தடவை. நான் இங்கிலாந்தில் இருந்தபோது  ஆங்கிலேயரின்