பக்கம் எண் :

340சத்திய சோதனை

Untitled Document
வீரனும்           வெட்கமடையும்படி செய்யும் தீரம் கொண்ட சில
பெண்களுடன் பழகும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. அத்தகைய
பெண்களில் இவரும் ஒருவர். இப்பொழுது     இவர் வயது முதிர்ந்த
மாது. இவர் என்னிடம் இருந்தபோது     நான் அறிந்திருந்ததுபோல,
இப்பொழுது இவர் மனநிலையைப் பற்றி நான் அறியேன்.   ஆனால்,
இந்த யுவதியுடன் ஏற்பட்ட பழக்கம்          எனக்கு என்றென்றும்
புனிதமானதொரு நினைவாகவே இருந்துவரும்.  ஆகையால், இவரைப்
பற்றி எனக்குத் தெரிந்தவைகளைக் கூறாமல்    விடுவேனாயின் நான்
சத்தியத்திற்குத் துரோகம் செய்தவனாவேன்.

     லட்சியத்திற்காக உழைப்பதில்         இவருக்கு இரவென்றும்
பகலென்றும் தெரியாது. நள்ளிரவில்         தன்னந்தனியாக வெளி
இடங்களுக்குச் செய்தி கொண்டுபோவார்.         துணைக்கு ஆள்
அனுப்புவதாகச் சொன்னால், கோபத்தோடு அதை  மறுத்து விடுவார்.
ஆயிரக்கணக்கான தீரமான இந்தியர்,      இவருடைய புத்திமதியை
எதிர்நோக்கி  நின்றனர். சத்தியாக்கிரக      சமயத்தில் தலைவர்கள்
எல்லோரும் சிறையில்       இருந்தபோது   இவர் தன்னந்தனியாக
இயக்கத்தை         நடத்தி வந்தார்.              அப்பொழுது
ஆயிரக்கணக்கானவர்களை வைத்துக்கொண்டு     இவர் நிர்வகிக்க
வேண்டியிருந்தது. கவனிக்க வேண்டிய கடிதப் போக்குவரத்துக்களும்
ஏராளமாக இருந்தன. ‘இந்தியன்    ஒப்பீனியன்’ பத்திரிக்கையையும்
இவரே       நடத்த           வேண்டியிருந்ததென்றாலும், இவர்
சோர்வடைந்துவிட்டதே இல்லை.

     குமாரி ஷிலேஸினைக் குறித்து முடிவில்லாமல்  நான் எழுதிக்
கொண்டே போக முடியும். எனினும்,  இவரைக் குறித்துக் கோகலே
கொண்டிருந்த அபிப்பிராயத்தைக்      கூறி இந்த அத்தியாயத்தை
முடிக்கிறேன். என் சக ஊழியர்கள்   ஒவ்வொருவரையும் கோகலே
நன்கு அறிவார். அவர்களில் பலரை    அவருக்குப் பிடித்திருந்தது.
அவர்களைப் பற்றி தமது    அபிப்பிராயத்தையும் கூறுவார். எல்லா
இந்திய, ஐரோப்பிய சக ஊழியர்களிலும்     குமாரி ஷிலேஸினுக்கு
அவர் முதலிடம் கொடுத்தார்.  “குமாரி, ஷிலேஸினிடம் நான் கண்ட
தியாகம், தூய்மை, அஞ்சாமை     ஆகியவைகளைப் போல வேறு
யாரிடமும் நான் கண்டதில்லை” என்றார்,   அவர். “உங்களுடைய
சக ஊழியர்களிடையே குமாரி ஷிலேஸின்   முதலிடம் வகிக்கிறார்
என்பதே என் அபிப்பிராயம்” என்றும் கூறினார்.