பக்கம் எண் :

38சத்திய சோதனை

Untitled Document
பதின்மூன்று வயது இருக்கும். என்றாலும்,      அவர் வாசிப்பதைக்
கேட்டு நான் பரவசமாகிவிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
ராமாயணத்தினிடம்        எனக்கு ஆழ்ந்த   பக்தி ஏற்படுவதற்கு
அடிகோலியதே அதுதான்.  பக்தி நூல்களிலெல்லாம் தலையாய நூல்
துளசிதாஸரின் ராமாயணமே என்று நான் இன்று கருதுகிறேன்.

     இதற்குச் சில மாதங்கள் கழித்து  நாங்கள்    ராஜ்கோட்டிற்கு
வந்தோம். ராமாயண பாராயணம் எதுவும்  இங்கே நடைபெறவில்லை.
ஒவ்வோர் ஏகாதசி  தினத்தன்றும் பாகவதம் படிப்பது வழக்கம். சில
சமயங்களில்        நான் கேட்கப்  போவேன்.  ஆனால் அதைப்
படித்தவரோ,       கேட்போருக்கு உருக்கம் உண்டாக்கக் கூடியவர்
அன்று. பாகவதம்       சமய உணர்ச்சியை உண்டாக்க வல்ல நூல்
என்பதை        இன்று நான் காணுகிறேன். அதைத்    தீவிரமான
சிரத்தையுடன் குஜராத்தி மொழியில்    படித்திருக்கிறேன். ஆனால்,
என்னுடைய  இருபத்தொரு நாள்         உண்ணாவிரத காலத்தில்
பாகவதத்தின் மூலத்திலிருந்து      சில பகுதிகளைப் பண்டித மதன்
மோகன     மாளவியா     படிக்க நான் கேட்டேன்.     பண்டித
மாளவியாவைப் போன்ற ஒரு பக்தர்        அதைப் படிக்கச் சிறு
வயதிலேயே நான் கேட்டிருந்தால்   அப்போதிருந்தே    அதன்மீது
எனக்கு விருப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரிந்தது. அந்த வயதில்
உருவாகும் அபிப்பிராயங்கள்      ஒருவருடைய சுபாவத்தில் ஆழ
வேரூன்றி விடுகின்றன.  அந்தக் காலத்தில் இதுபோன்ற மற்றும் பல
நல்ல நூல்களைப்   படிக்கக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாது
போயிற்றே என்ற வருத்தம் என்னைவிட்டு என்றும் நீங்காது.

     என்றாலும்,       ஹிந்து சமயத்தின்   எல்லா உட்பிரிவுகள்
சம்பந்தமாகவும், மற்றச் சகோதர சமயங்கள் விஷயத்திலும் சகிப்புத்
தன்மையுடன்       இருக்கும்     ஆரம்பப்  பயிற்சியும் எனக்கு
ராஜ்கோட்டிலேயே கிடைத்தது.     ஏனெனில்,   என்  தந்தையும்
தாயாரும் விஷ்ணு கோயிலுக்குப் போவதோடு சிவன் கோயிலுக்கும்,
ராமர்  கோயிலுக்கும் போவார்கள்.  அங்கெல்லாம் சிறுவர்களாகிய
எங்களையும்  அழைத்துப் போவார்கள் ;  அனுப்புவார்கள். ஜைன
பிக்ஷீசுக்கள் அடிக்கடி     என் தந்தையைப் பார்க்க வருவார்கள்.
ஜைனர்கள் அல்லாத எங்கள்      வீட்டில் சாப்பிடும் அளவுக்கும்
அவர்கள்        தாராளமாக நடந்து     கொள்ளுவார்கள். சமய
விஷயங்களைக்  குறித்தும், உலக விவகாரங்களைக் குறித்தும் என்
தந்தையுடன் அவர்கள் பேசுவார்கள்.

     இதல்லாமல்  அவருக்கு      முஸ்லீம், பார்ஸி நண்பர்களும்
உண்டு.          தங்கள் சமயங்களைப் பற்றி அவர்கள் இவரிடம்
பேசுவார்கள்.எப்பொழுதுமே அவர்கள்   கூறுவனவற்றிற்கு மதிப்புக்
கொடுத்தும்,  பெரும்பாலும்   சிரத்தையுடனும் இவர் கேட்பார். என்
தந்தையாருக்கு      நான் பணிவிடை செய்து வந்ததால் அவர்கள்
பேசிக் கொண்டிருப்பதைக்    கேட்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி
கிட்டியது.