பக்கம் எண் :

383

Untitled Document
என்பதைக் கண்டேன். மேலும், அது பலவீனங்களின் ஆயுதமாகவும்
கருதப்பட்டது.     அதில் பகைமைக்கு இடம் உண்டு என்பதையும்,
முடிவில் அதுவே பலாத்காரமாக வளர்ந்து விடக்கூடும் என்பதையும்
அறிந்தேன். இந்தக் கருத்துக்களை     எல்லாம் நான் மறுத்துக்கூறி,
இந்தியரின்           இயக்கத்தினுடைய உண்மையான தன்மையை
விளக்கவேண்டி இருந்தது.    இப் போராட்டத்தைக் குறிப்பிடுவதற்கு
ஒரு புதிய சொல்லை இந்தியர்   கண்டுபிடித்தாக வேண்டும் என்பது
தெளிவாயிற்று.

     நான் எவ்வளவோ முயன்று பார்த்தும் ஒரு   புதிய பெயரைக்
கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை. ஆகவே,  இது சம்பந்தமாகச்
சிறந்த யோசனையைக் கூறுபவருக்கு ஒரு    சிறு பரிசு அளிப்பதாக
‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகை மூலம்      அறிவித்தேன். இதன்
பயனாக மகன்லால் காந்தி            ‘சதாக்கிரகம்’ (சத்-உண்மை;
ஆக்கிரகம்-உறுதி) என்ற சொல்லைச் சிருஷ்டித்துப் பரிசைப்பெற்றார்.
ஆனால், அது இன்னும் தெளிவானதாக இருக்கட்டும்   என்பதற்காக
அதைச் ‘சத்தியாக்கிரகம்’         என்று மாற்றினேன். அதிலிருந்து
அப்போராட்டத்திற்குக் குஜராத்தியில்     அச்சொல் வழங்கலாயிற்று.

     இந்தப் போராட்டத்திற்குச்          சரித்திரமே, என்னுடைய
தென்னாப்பிரிக்க வாழ்க்கையின்   சரித்திரமும் - முக்கியமாக அந்த
உபகண்டத்தில்             நான் நடத்திய  சத்திய சோதனையின்
சரித்திரமும்-ஆகும்.        இந்தச் சரித்திரத்தின் பெரும் பகுதியை
எராவ்டாச் சிறையில்           இருக்கும்போது எழுதினேன். நான்
விடுதலையான            பிறகு மீதத்தைப் பூர்த்திசெய்தேன். அது
‘நவ ஜீவ’னில் பிரசுரமாகிப்     பின்னர் புத்தகரூபமாக வெளிவந்தது.
‘கரண்ட்தாட்’     பத்திரிக்கைக்காக ஸ்ரீ வால்ஜி கோவிந்தஜி தேசாய்,
அதை       ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவருகிறார். சீக்கிரத்தில்
அதைப்       புத்தக ரூபத்தில் வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்து
கொண்டிருக்கிறேன்.     தென்னாப்பிரிக்காவில் நான் செய்த மிகவும்
முக்கியமான சோதனைகளை அறிய    விரும்புவோருக்கு உதவியாக
இருக்கட்டும் என்பதற்காகவே             இந்த ஏற்பாடு இன்னும்
படிக்காதவர்கள்                நான் எழுதிய ‘தென்னாப்பிரிக்கச்
சத்தியாக்கிரகத்’தைப்       படிக்கும்படி சிபாரிசு செய்வேன். அதில்
எழுதியிருப்பதை இங்கே    நான் திரும்பச் சொல்லப் போவதில்லை.
ஆனால், பின்வரும் சில அத்தியாயங்களில்    அந்தச் சரித்திரத்தில்
கூறப்படாத என் வாழ்க்கையின் சொந்தச்    சம்பவங்கள் சிலவற்றை
மாத்திரமே கூறுவேன். இவற்றைச் சொல்லி முடித்ததும்,  இந்தியாவில்
நான் செய்த           சில சோதனைகளைக் குறித்து உடனே கூற
ஆரம்பிப்பேன். ஆகையால்,                இந்தச் சோதனையை
வரிசைக்கிரமத்தில்   கவனிக்க விரும்புகிறவர்கள், தென்னாப்பிரிக்கச்
சத்தியாக்கிரக சரித்திரத்தை      முன்னால் வைத்துக் கொள்ளுவது
நல்லது.