பக்கம் எண் :

405

Untitled Document
பார்ப்பதைத் தவிர     அவர்களுக்கு     நான் சொல்லிக் கொடுக்க
வேண்டியது அதிகமில்லை      என்பதை அனுபவத்தில் கண்டேன்.
இவ்வளவோடு நான்              திருப்தியடைந்து விட்டதால், பல
வயதையுடையவர்களையும்,       வெவ்வேறு        பாடங்களைப்
படிப்பவர்களையும்           ஒரே வகுப்பில் வைத்துச் சமாளிப்பது
சாத்தியமாயிற்று.

     பாடப் புத்தகங்களின் அவசியத்தைக் குறித்துப்   பிரமாதமாகக்
கூறப்படுகிறது. ஆனால், அவை         அவசியம் என்று எனக்குத்
தோன்றவே இல்லை. கிடைத்த பாடப்      புத்தகங்களைக்கூட நான்
அவ்வளவாகப் பயன்படுத்திக் கொண்டதாக எனக்கு நினைவு இல்லை.
ஏராளமான புத்தகங்களைப்        பிள்ளைகளின் மேல் சுமத்துவது
அவசியம்          என்பதையும் நான் காணவில்லை. மாணவருக்கு
உண்மையான பாடப் புத்தகம்       உபாத்தியாயரே என்பதை நான்
எப்பொழுதும் உணர்ந்து வந்தேன்.          என் உபாத்தியாயர்கள்
புத்தகங்களிலிருந்து எனக்குச் சொல்லிக் கொடுத்த   எதுவும் எனக்கு
நினைவில் இல்லை. ஆனால்,      புத்தகங்களைக் கொண்டல்லாமல்
தனியாக அவர்கள்        எனக்குச்  சொல்லிக் கொடுத்ததெல்லாம்
இப்பொழுதும் கூடத் தெளிவாக       என் நினைவில் இருக்கின்றன.

     எப்பொழுதுமே குழந்தைகள்    கண்ணால் பார்த்துத் தெரிந்து
கொள்ளுவதை விட அதிகமாகவும், கஷ்டமின்றியும் காதால் கேட்டுத்
தெரிந்து கொள்ளுகின்றனர்.      என் பையன்களுடன் நான் எந்தப்
புத்தகத்தையும் முதல் பக்கத்திலிருந்து    கடைசிப் பக்கம் வரையில்
படித்து முடித்ததாக        எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், பல
புத்தகங்களிலும் நான் படித்துத் தெரிந்து கொண்டவைகளை எல்லாம்
என்னுடைய சொந்த நடையில்    அவர்களுக்குச் சொல்லி வந்தேன்.
அவை இன்னும் அவர்கள்  ஞாபகத்தில் இருந்து வருகின்றன என்று
நான் தைரியமாகச்             சொல்லுவேன். புத்தகங்களிலிருந்து
படிப்பவைகளை நினைவில் வைத்துக் கொள்ளுவது  அவர்களுக்குச்
சிரமமாக இருந்தது. ஆனால்,              நான் வாய்மொழியாகச்
சொன்னவைகளையெல்லாம் வெகு எளிதாக     அவர்கள் திரும்பச்
சொல்லி விட முடிந்தது. புத்தகத்தைப் படிப்பது     அவர்களுக்குக்
கடினமாக இருந்தது. ஆனால்,            சொல்லுகிற விஷயத்தை
அவர்களுக்குச்    சுவையாக இருக்கும்படி மாத்திரம் நான் சொல்லி
விடுவேனாயின், அவைகளைக்   கேட்பதே அவர்களுக்கு இன்பமாக
இருந்தது. நான் பேசியதைக் கேட்டுவிட்டு,   அதன்பேரில் அவர்கள்
கேட்ட கேள்விகளிலிருந்து, அவர்கள்    நான் கூறியதை எவ்வளவு
தூரம் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை  நான் அளந்தறிய
முடிந்தது.