பக்கம் எண் :

நாகபுரியில் 601

Untitled Document
நம்புவது வெறும் மயக்கம்       என்பதே என் கருத்து. எப்படியும்
தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும் ஆறாயிரம்    பொறுப்பற்ற ஆசாமிகளை
விட, மக்களின் நன்மையில்    தீவிர ஆர்வம் கொண்ட, விசாலமான
மனப்போக்குள்ள, உண்மையானவர்களான       ஆயிரத்து ஐந்நூறு
பிரதிநிதிகளே ஜனநாயகத்திற்கு என்றும் சிறந்த  பாதுகாப்பாவார்கள்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால்,     மக்கள் தீவிரமான
சுதந்திர உணர்ச்சியும், சுயமதிப்பும்,          ஒற்றுமை உணர்ச்சியும்
உள்ளவர்களாக             இருக்க வேண்டும். நல்லவர்களாகவும்,
உண்மையானவர்களாகவும்             இருப்பவர்களையே தங்கள்
பிரதிநிதிகளாகத்     தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும்   அவர்கள்
வற்புறுத்த வேண்டும்.         பிரதிநிதிகளின் தொகை விஷயத்தில்
விஷயாலோசனைக் கமிட்டி ஏதோ மனக்கிலேசம் அடைந்திருந்ததால்,
ஆறாயிரம் என்ற              எண்ணுக்கு மேலேயும் போக அது
விரும்பியிருக்கக் கூடும். ஆகையால், ஆறாயிரம்     என்ற எல்லை
சமரசத்தின் பேரில் திட்டம் செய்யப்பட்டது.

     காங்கிரஸின் லட்சியத்தைப் பற்றிய      விஷயத்தில் பலமான
விவாதம் நடந்தது. நான் சமர்ப்பித்திருந்த      அமைப்பு விதிகளில்
சாத்தியமானால் பிரிட்டிஷ்           சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிய
சுயராஜ்யத்தை அடைவது, அவசியமானால்     அதற்குள் அடங்காத
சுயராஜ்யத்தைப் பெறுவது என்பது காங்கிரஸின்     லட்சியம் என்று
இருந்தது. காங்கிரஸிலிருந்த         ஒரு கோஷ்டியினர், ‘பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்திற்குள் சுதந்திரம் அடைவது   என்பது மாத்திரம்’ என்று
காங்கிரஸின்     லட்சியத்தைக் கட்டுப் படுத்திவிட வேண்டும் என்று
விரும்பினார்கள்.             இக்கட்சியினரின் கருத்தைப் பண்டித
மாளவியாஜியும், ஸ்ரீ ஜின்னாவும்        எடுத்துக் கூறினர். ஆனால்,
தங்களுக்கு ஆதரவாக      அதிக வாக்குகளைப் பெற அவர்களால்
முடியவில்லை. அதோடு, ‘சுதந்திரத்தை அடைய அனுசரிக்கும் முறை,
சமாதானத்தோடு கூடியதாகவும்,         நியாயமானதாகவும் இருக்க
வேண்டும்’ என்றும் அமைப்பு      விதிகளின் நகல் கூறியது. இந்த
நிபந்தனைக்கும்  எதிர்ப்பு இருந்தது. அனுசரிக்கும் முறையைப் பற்றி
எந்த     விதமான தடையும் இருக்கக்கூடாது என்று எதிர்த்தவர்கள்
கூறினார்கள். இதைக் குறித்துத் தெளிவாக மனம் விட்டு  விவாதித்த
பிறகு, அசல் நகலில்     கூறியிருப்பதைக் காங்கிரஸ் அங்கீகரித்தது.
இந்த              அமைப்பு விதிகளை மக்கள் யோக்கியமாகவும்,
புத்திசாலித்தனத்தோடும், உணர்ச்சியோடும்    நிறைவேற்றியிருந்தால்,
பொதுமக்கள் அறிவைப் பெறுவதற்கு       அதுவே சக்தி வாய்ந்த
ஆயுதமாக இருந்திருக்கும் என்பது என்    அபிப்பிராயம். அதோடு,
அதை   நிறைவேற்றி வைப்பதற்குச் செய்யும் காரியங்களே நமக்குச்
சுயராஜ்யத்தையும்       கொண்டு வந்திருக்கும்.   ஆனால் இந்தக்
கருத்தைக் குறித்து இங்கே விவாதிப்பது       பொருத்தமற்றதாகும்.