பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்111

தரங்கம்பாடி

பூம்புகாரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் தரங்கம்பாடி
என்ற இடம் உள்ளது. இங்கு டென்மார்க் நாட்டினரின் நினைவுச்
சின்னங்கள் சில உள.

டென்மார்க் நாட்டினர் இந்தியாவுடன் வாணிபம் புரியக்
கி.பி. 1612இல் ஒரு கழகத்தை தோற்றுவித்தனர். இவர்கள்
தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் இரகுநாதரிடமிருந்து
கி.பி. 1620இல் தரங்கம்பாடியில் வாணிபத்தலம் அமைக்க
அனுமதி பெற்றனர். 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் இவர்கள்
இங்கு ஒரு கோட்டையும் மாளிகையும் கட்டினர்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த
மார்டின் லூதர்
(1483-1546) என்பவர் ரோமன் கத்தோலிக்கத்
திருச்சபையை எதிர்த்துச் சீர்திருத்த கிறித்தவ சபையைத்
தோற்றுவித்தார். சீர்திருத்த கிறித்தவ சமயம்
ஜெர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன்,
இங்கிலாந்து முதலிய நாடுகளில் பரவியது. ஜான் கால்வின்
என்பவர் சீர்திருத்த சமயத்தின் மற்றொரு முக்கியத் தலைவர்
ஆவார். சீர்திருத்த சபையினரின் ஒரு பிரிவினர்
கி.பி. 1706இல் தரங்கம்பாடிக்கு வந்தனர். டென்மார்க் மன்னர்
நான்காம் பிரெடரிக், ஸீகன்பால்கு
என்ற பெரியாரைத்
தரங்கம்பாடிக்குச் சீர்திருத்த கிறித்தவ சமயத்தைப் பரப்பும்
நோக்கத்துடன் அனுப்பி வைத்தார். ஸீகன் பால்கு எல்லப்ப
உபாத்தியாயர் என்பவரிடம் தரங்கம்பாடியில் தமிழ் கற்றார்.
இவர் சீர்திருத்த கிறித்தவ சமயத்தைத் தமிழில் பரப்பினார்.
இவர் தமிழ்மொழிக்கும் சிறந்த தொண்டாற்றினார்.
ஜெர்மனியிலிருந்து அச்சுப் பொறியைக் கொண்டுவந்து
கி.பி.1713இல் தமிழில் நூல்களை அச்சிட்டு வழங்கினார்.
“தமிழ்நாட்டில் முதன் முதலில் தமிழ் மொழியில்
நூல்களை அச்சிட்டு வழங்கிய பெருமை ஸீகன் பால்கு
அவர்களையே சேரும்.”

தரங்கம்பாடியில் கிறித்தவ சமயப் பணியாற்றிய மற்றொரு
பெரியார் சுவாட்ஸ் (1726-1797) ஆவார்.