3. இக்கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளன. இவற்றுள்
ஏழாம் பிரகாரத்திலுள்ள இராய கோபுரம், சிகரப்பகுதி இன்றி
நீண்ட காலமாக இருந்தது. இக்கோபுரத்தினை முற்றுப் பெறச்
செய்யும் திருப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இக்கோபுரம்
முற்றுப்பெற்றால் இந்தியாவிலேயே உயரமான கோபுரமாக
(69 மீட்டர்)க் காட்சியளிக்கும்.
4. கட்டடக் கலைக்கும்,
சிற்பக் கலைக்கும் சிறந்த ஒரு
கருவூலமாக ஸ்ரீரங்கம் கோவில் உள்ளது. இங்குள்ள வேணு
கோபால கிருஷ்ணன் சந்நிதி ஓர் உன்னதக் கலைப்படைப்பு
ஆகும். ஒய்சள மன்னர் வீர ராமநாதன் காலத்தில்
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் இச்சந்நிதி உருவாக்கப்பட்டது.
கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் காணப்படும்
கருங்கல்
சிற்பங்கள் வனப்புமிக்கவை. நுட்பமான வேலைப்பாட்டினைக்
கொண்டுள்ளன. ‘வீணை வாசிக்கும் பெண்’, ‘முகக்
கண்ணாடியைப் பிடித்துக்கொண்டு நெற்றியில் திலகமிடும்
பெண்’, ‘கிளியுடன் காணப்படும் பெண்’, ‘நாணிய நிலையில்
உள்ள பெண்’ முதலிய சிற்பங்கள் யாவும் மிக நேர்த்தியான
படைப்புகள் ஆகும். இச்சந்நிதியின் முகமண்டப மேல்விதானத்தின்
அழகிய ஓவியங்கள் உள்ளன. இவை கி.பி. 14ஆம்
நூற்றாண்டிற்குரிய விஜயநகர கால ஓவியங்கள் எனக்
கருதப்படுகின்றன.
நான்காம் பிரகாரத்திலுள்ள
சேஷராயர் மண்டபம்
ஸ்ரீரங்கம் கோவிலின் சிற்பக்கலைச் சிறப்புமிக்க மற்றொரு
பகுதியாகும். இம்மண்டபத்திலுள்ள எட்டுத்
தூண்கள்
சிற்ப அதிசயங்களாகும் இவை விஜயநகர அரசு காலத்தில்
அமைக்கப்பட்டவையாகும், விஜயநகரப் பேரரசின் வீரத்தினை
நினைவூட்டும் வகையில் இத்தூண்கள் காட்சியளிக்கின்றன.
இவை ஒற்றைக் கல்லினாலானவை. முன்னங்கால்களைத்
தூக்கிப் பாய்ந்தெழும் நிலையிலுள்ள குதிரைகளின்மீது
கம்பீரமான போர்வீரர்கள் அமர்ந்திருக்கும் நிலையிலுள்ள
இக்கற்றூண்கள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.
குதிரைகளின் கால்கள் அடியில் வேடுவர்கள், காட்டு
மிருகங்களை எதிர்த்துப் போரிடும் காட்சி யாவரும்
போற்றும்படியாக உள்ளது. இங்குள்ள தூண் ஒவ்வொன்றும்
ஒரு கலைக் கருவூலம் எனலாம்.
|