விஜயரகுநாதராயத் தொண்டைமான் (1807-1825) தமது 10ஆவது
வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு பிளாக்பர்ன் என்ற
ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். இவரது
யோசனைப்படி, புதுக்கோட்டையின் பழைய கட்டடங்கள்
இடிக்கப்பட்டுப் புதிய தெருக்கள் உண்டாக்கப்பட்டன (கி.பி. 1812).
கி.பி. 1818இல் மன்னரின் அரண்மனை கட்டி முடிக்கப்பட்டது.
அரண்மனையைச் சுற்றிச் சதுர வடிவில் புதிய தெருக்கள்
எழுந்தன. விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து
ரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத்
தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக
வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய்
இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை சேஷய்ய
சாஸ்திரி என்ற திவான் கவனித்தார். இவரது பதவிக் காலத்தில்
(1878-94) புதுக்கோட்டை நகரின் வளர்ச்சிக்கு மேலும் பல
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நிலவரி முறை சீர்திருத்தி
அமைக்கப்பட்டது. நகரில் மருத்துவமனை, கல்லூரி ஆகியவை
எழுந்தன. இவரது சீர்திருத்தங்களின் விளைவாகப் புதுக்கோட்டை
நகர் மிக்க செழிப்புடன் விளங்கியது.
இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து
மார்த்தாண்ட
பைரவத் தொண்டைமான் புதுக்கோட்டையின் மன்னரானார்
(1886). 1912ஆம் வருடம் புதுக்கோட்டை நகரில் நகராட்சி
ஏற்பட்டது. மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானுக்குப்
புதிய அரண்மனை ஒன்று 1913இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு
1929இல் கட்டி முடிக்கப்பட்டது. 1947இல் இந்தியா சுதந்தரமடைந்த
பொழுதும், புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தனி ஆட்சி இருந்தது.
1948இல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியனுடன்
இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன்
இணைக்கப்பட்டுச் சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியாக
ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர்
இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார். 1974இல்
தஞ்சை, திருச்சி மாவட்டங்களின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டுப்
புதுக்கோட்டை என்ற புதிய மாவட்டமாக அமைக்கப்பட்டது.
புதுக்கோட்டை
|