30. ஸ்ரீ வில்லிபுத்தூர்
ஸ்ரீ வில்லிபுத்தூர் என்ற நகர் இராமநாதபுர மாவட்டத்தில்
உள்ளது. மதுரையிலிருந்து 77 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்நகர் வைணவர்களின் முக்கிய யாத்திரைத் தலம் ஆகும்.
விஷ்ணு சித்தர் என்பவர் ஒரு சிறந்த வைணவ பக்தர்
ஆவார். இவரே பெரியாழ்வார் என அழைக்கப்பட்டார். இவர்
தமது துளசித் தோட்டத்தில் குழந்தை ஒன்றைக் கண்டார்.
இக்குழந்தையே பின்பு ஆண்டாள் என அழைக்கப்பட்டது.
பெரியாழ்வார் ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையானார்.
விஷ்ணுவின்மீது ஆண்டாள் அதிக பக்தி கொண்டவராயிருந்தார்.
இவர் விஷ்ணுவின்மீது பாடிய பக்திப் பாடல்கள்
திருப்பாவையிலும், நாச்சியார் திருமொழியிலும் உள்ளன.
ஸ்ரீரங்கத்திலுள்ள ரெங்கநாதசுவாமியை மணந்து, ஆண்டாள்
தெய்வீகத் தன்மை பெற்றார் என்பர். ஆண்டாள்
கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள புகழ்மிக்க கோவிலாகும்.
வடபத்ரசாயி கோவில்
ஆண்டாள் கோவிலுக்கு அருகில் வடபத்ரசாயி கோவில்
உள்ளது. ஆண்டாள் கோவிலின் தோற்றத்திற்கு முன்பே
இக்கோவில் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இக்கோவிலின் சில பகுதிகள் பெரியாழ்வாரால்
கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. (பெரியாழ்வார் கி.பி. 9ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார்). இக்கோவிலின்
கோபுரம் 60 மீட்டர் உயரமுடையது. இது விஜயநகர் காலப்
பணியாகும். தற்பொழுது இது பழுதடைந்த நிலையில் உள்ளது.
வடபத்ரசாயி கோவிலின் கருவறையில் பெருமாள்
ஸ்ரீதேவியுடனும் பூதேவியுடனும் சயனநிலையில் காட்சி
தருகிறார். பெருமாளின் சந்நிதிக்கு அருகில் பெரியாழ்வார்
சந்நிதியும், ஸ்ரீஆண்டாள் பிறந்த இடத்தைக் குறிக்கும்
சந்நிதியும் உள்ளன.
|