| பூம்புகார் நகரம் சங்ககாலத்தில் மிகவும் பெரியதொரு நகரமாகக் காட்சியளித்தது. இந் நகரின் உட்புறத்துக்குப் பட்டினப்பாக்கம் என்றும், புறநகருக்கு மருவூர்ப்பாக்கம் என்றும் பெயர்.150 இவ்விரு பாக்கங்கட்கும் நடுவில் இடைவெளி யொன்று உண்டு. அங்குத்தான் நாளங்காடிகள் (பகற்காலக் கடைகள்) நடைபெற்று வந்தன. இரவில் அல்லங்காடிகள் (இரவுக் கடைகள்) நடைபெற்றன. மதுரை மாநகரும் செழித்தோங்கி விளங்கிற்று.151 அங்கும் இவ்வங்காடிகள் நடைபெற்று வந்தன. வாணிகம் பழந்தமிழர் காலத்தில் நடைபெற்ற வாணிக வளத்தைப் பற்றிய சான்றுகள் அயல்நாட்டு வரலாற்றுக் குறிப்புகளினின்றும் நமக்குக் கிடைத்துள்ளன. சங்க இலக்கியத்திலும் அகச் சான்றுகள் எண்ணற்றவை உண்டு. வாழ்க்கை நலன்களுக்கான பல பண்டங்களும், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களும் தமிழகத்தில் உற்பத்தியாயின. பண்டைய தமிழர் ஈடுபட்டிருந்த இரு பெரும் உற்பத்தித் தொழில்கள் உழவும் வாணிகமும். உழவுத் தொழிலைச் சிறப்பித்து மக்களுக்கு அதன் பெருமையையும் இன்றியமையாமையும் வலியுறுத்திக் கூறும் அளவுக்கு அத் தொழிலைவிட வாணிகம் வளர்ந்திருந்தது. மக்களுள் பெரும்பாலார் வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். சிலர் தலைமுறை தலைமுறையாகத் தாம் செய்துவந்த தொழிலை மாற்றிக் கொண்டு வேறு தொழில்களையும் செய்து வந்தனர். புலவர்கள் வாணிகம் செய்தனர். மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், ஓதலாந்தையார், கச்சுப்பேட்டு இளந்தச்சனார், கணக்காயன் தத்தனார், கணியன் பூங்குன்றனார், செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன், தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான், மதுரைக் கொல்லன் புல்லன், மதுரைத் தமிழ்க்கூத்தனார் ஆகியவர்கள் சங்ககாலப் புலவர்களுள் சிலர். அவர்கள் மேற்கொண்டிருந்த தொழில்களை அவர்களுடைய பெயர்களே எடுத்துக்காட்டும். இன்ப வாழ்க்கைக்கான பண்டங்கள் பலவற்றை உற்பத்தி செய்வதில் தமிழ்நாட்டுக் கைவினைஞருடன் அயல்நாட்டுத் 150. சிலப். 5 : 39, 5 : 58. 151. மதுரைக். 430, 544; சிலப். 5: 63 (உரை) |