| பறையன், கடம்பன்’ ஆகிய குடிகளைவிடச் சிறந்த குடிகள் வேறு இல என்று அவர்களுடைய தொழிலின் சிறப்பைப் பாராட்டி மாங்குடி கிழார் பாடியுள்ளார்.155 பழந் தமிழகத்தில் நடைபெற்றுவந்த வாணிகங்களுள் சிறப்பானவை உடை வாணிகம், ஓலை வாணிகம், கூல வாணிகம், பொன் வாணிகம் ஆகியவையாம். பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே வாணிகம் நடைபெற்று வந்தது. தேன், நெய், கிழங்கு ஆகிய பண்டங்கள் மீனுக்கும் நறவுக்கும் மாற்றப்பட்டன. கரும்பும் அவலும், மான் ஊனுக்கும் கள்ளுக்கும் மாறின.156 நெய்யை விற்று எருமை வாங்கினர்.157 உப்புக்கு நெல் மாற்றப் பட்டது.158 பச்சைப் பயற்றுக்கு ஈடாகக் கெடிறு என்னும் மீன் மாற்றிக் கொள்ளப்பட்டது.159 பண்டமாற்று முறையில் ‘குறியெதிர்ப்பை’ என்று ஒரு முறையும் வழங்கி வந்தது. குறிப்பிட்ட ஓரளவு பண்டத்தைக் கடனாகக் கொண்டு ஒரு காலத்துக்குப் பிறகு அதைத் திருப்பிக் கொடுப்பதுதான் இம்முறையாகும்.160 சில பண்டங்கள் உற்பத்தியான இடத்திலேயே விற்பனையாயின. சிலவற்றை ஊர்ஊராக எடுத்துச் சென்று விற்று வருவார்கள். உப்பு அப்படி விற்கப்பட்ட பண்டந்தான். மிளகையும் ஊர் ஊராகச் சென்று விற்பதுண்டு. பண்டங்களை வண்டிகளின் மேலும், கழுதைகளின் மேலும் ஏற்றிச் செல்லுவர்.161 சரக்குப் பொதிகளின்மேல் அவற்றின் அளவோ எடையோ பொறிக்கப்பட்டிருக்கும்.162 அவற்றை ஏற்றிச் சென்ற வண்டிகளின்மேலும் அளவு பொறிக்கப்படுவதுண்டு.163 தாம் விற்கும் பண்டங்களைப் பற்றிய விளக்கம் எழுதிய கொடிகளை வணிகர்கள் தம் கடைகளின்மேல் பறக்கவிடுவார்கள்.164 வணிகர்கள் கூட்டங் கூட்டமாகக் கூடித் தம் பண்டங்களைப் பல ஊர்களுக்கும் விற்பனைக்கு எடுத்துச் செல்லுவார்கள். இக் குழுக்களுக்கு வாணிகச் சாத்துகள் என்று பெயர். ஆறலைக்கும் கள்வருக்கு அஞ்சி அவர்கள் சாத்துகளாகக் கூடிச் செல்லுவது வழக்கம்.165 அளவுக்கு மிஞ்சிக் கொள்ளாமலும், அளவைக் குறைத்துக் கொடுக்காமலும், வணிகர்கள் தம் தொழிலை நேர்மையாக நடத்தி வந்தனர்.166 வாணிகச் சாத்துகள் கழுதையின்மேல் 155. புறம். 355. 156. பெரும்பாண். 161-5 157. பெரும்பாண். 164-165. 158. குறுந் : 269: 5 ; அகம். 140 159. ஐங்குறு. 47. 160. புறம். 163; குறள். 221 (பரிமே-உரை) 161. பெரும்பாண். 80-81. 162. சிலப். 5 : 111-2 163. சிலப். 26 : 136. 164. மதுரைக். 365-73. 165. குறுந். 390. 166. பட்டினப். 209-10. |