இவன் துட்டகாமணி என்ற சிங்கள மன்னன் கைகளில் தோல்வியுற்று உயிரிழந்தான். துட்டகாமணிக்குப் பிறகு நாட்டில் அரசுரிமைப் போராட்டமும் அதனால் கிளர்ச்சிகளும் எழுந்தன. அவற்றுக்கு ஒரு முடிவுகட்டி வட்டகாமணி என்பான் பட்டத்துக்கு வந்தான் (கி.மு.43). அவன் காலத்தில் இலங்கையின்மேல் தமிழரின் படையெடுப்பு ஒன்று நேர்ந்தது. தமிழரின் கைகளில் நாட்டின் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டைத் துறந்துவிட்டு ஓடிவிட்டான். ஆனால், மீண்டும் அவன் இலங்கையில் தோன்றித் தமிழரை முறியடித்து அரசைக் கைப்பற்றிக் கொண்டான். வசபன் என்ற மன்னன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் (கி. பி. 127-171) இலங்கையை ஆண்டு வந்தான். அவனுடைய காலத்திற்றான் சோழன் கரிகாலன் இலங்கையின்மேல் படையெடுத்தான். ஆனால், கயவாகு என்ற சிங்கள மன்னன் (கி.பி.174-196) சோழர்களை நாட்டைவிட்டு வெருட்டி இலங்கை முழுவதையும் தன் குடையின்கீழ்க் கொண்டு வந்தான். அஃதுடன் அமையாமல் அவன் சோழ நாட்டின்மேலும் படையெடுத்து வந்தனன் எனவும், அவனுடன் சோழ மன்னன் ஒருடன்படிக்கை செய்து கொண்டதாகவும் சிங்கள வரலாறுகள் கூறுகின்றன. சங்க காலத்தின் இறுதி மதுரைமா நகரில் நடைபெற்று வந்த கடைச்சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுற்றது. பாண்டி நாட்டில் மிகக் கொடியதொரு பஞ்சம் நேர்ந்ததாகவும் பன்னிரண்டாண்டுகள் அது நீடித்திருந்து மக்களை வாட்டியதாகவும், பாண்டிய வேந்தன் சங்கப் புலவர்களைப் பாதுகாக்க இயலாதவனாய் வெளியே பல இடங்கட்கும் சென்று வாழும்படி அவர்கட்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டான் என்றும், அஃதுடன் தமிழ்ச் சங்கம் இறுதியான முடிவை எய்தியது எனவும் செவிவழி வரலாறுகள் கூறுகின்றன. தமிழ்ச் சங்கம், முடிதற்கு வேறு காரணங்களும் சிலர் காட்டுவர். அவை ஒன்றுக்கேனும் போதிய சான்றுகள் இல்லை. எனினும், சங்கம் அழிவுற்றதற்கும், தமிழரின் பண்டைய பண்பாடுகளும் கலைகளும் மறைந்து போனதற்கும் தக்க காரணங்கள் இல்லாமற் போகவில்லை. ஏற்கெனவே ஆரியப் பண்பாடுகளாலும் சமயக் கருத்துகளாலும் சமுதாயக் கொள்கைகளாலும் அரிப்புண்டிருந்த தமிழரின் சமூகம் வேறு பல புரட்சிகளுக்கும் உட்படுவதாயிற்று. தமிழகம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே களப்பிரர் என்ற ஒரு குலத்தினரின் படையெடுப்புக்குட்பட்டு |