பக்கம் எண் :

பல்லவர்கள் 219

ஒருவனால் எழுப்பப் பட்டதாகும். தருமபுரி, அதமன்கோட்டை, பஸ்திபுரம்
ஆகிய இடங்களில் சமண உருவச் சிலைகள் கிடைத்துள்ளன. தருமபுரியில்
சமணப் பள்ளி ஒன்றும் அமைந்திருந்ததாகத் தெரிகின்றது.21 எனவே,
அதிகமான்கள் சமணர்கள் வளர்ச்சிக்கும் சார்புடையவர்களாக இருந்து
வந்துள்ளனர் என்பது விளக்கமாகின்றது.

சிற்றரசர்கள்

     தமிழகம் முழுவதிலும் சிற்சில இடங்களில் சிறு மன்னர்கள்
பேரரசர்கட்குத் திறை செலுத்தி அரசாண்டு வந்துள்ளனர். அவர்களுள்
தென்னார்க்காட்டு முனையரையரும் சேர்ந்தவர்கள். திருமுனைப்பாடி நாட்டை
யாண்டுவந்த நரசிங்க முனையரையர் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர்.
அவர் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனுக்குத் திறை செலுத்தியவர்.
பெரியபுராணத்தில் வரும் மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டு வேந்தர்.
இரண்டாம் நந்திவர்மனின் படைத்தலைவன் உதயசந்திரன் ஒரு சிற்றரசனாக
விளங்கினான். இவர்களல்லாமல் வேறு பல சிற்றரசர்களும் கல்வெட்டுக்
குறிப்புகளில் காணப்படுகின்றனர்.

     21. Ep. Ind. X pp. 58-70