பக்கம் எண் :

412தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     வேங்காஜி பான்ஸ்லே (1676-85) சிவாஜியின் தந்தைக்குத் துர்க்காபாயின்
வயிற்றில் பிறந்தவன். அவன் பீஜப்பூர்ச் சுல்தான் அடில் ஷாவினிடம்
தொண்டுபூண்டு தன் சகோதரன் சிவாஜியையும் ஜெய்சிங்கன் என்பவனையும்
எதிர்த்துப் போரிட்டான். மிக்க நேர்மையுடனும், அன்புடனும் ஆட்சிபுரிந்தான்
என்று ஜெசூட் பாதிரிகளின் குறிப்புகள் கூறுகின்றன. புதுச்சேரியில் வாணிகச்
செல்வாக்குப் பெற்றிருந்த பிரெஞ்சுக்காரருடன் வேங்காஜி உடன்படிக்கை
யொன்றைச் செய்துகொள்ள முயன்றான். மைசூரை எதிர்த்துப்
போராடுவதற்காக மதுரை நாயக்கனுக்கு அவன் துணைபுரிந்து வந்தான்.
ஆனால், நாளடைவில் வேங்காஜி கொடுங்கோலனாக மாறிவிட்டான்.
சிவாஜிக்கு மிகப் பெரிய தொகை இலஞ்சமாகக் கொடுத்துச் சமாதானத்தை
விலைக்கு வாங்க வேண்டியவனாக இருந்தான். ஆகையாலும், தஞ்சாவூர்ச்
சீமையில் 1677, 1680 ஆம் ஆண்டுகளில் ஆறுகள் பெருக்கெடுத்துப் பெருஞ்
சேதம் விளைத்தன ஆகையாலும், அவனுக்குப் பொருள் தேவையாக
இருந்தது. அதற்காக அவன் மக்கள்மேல் மிகக் கொடிய வரிச்சுமைகளை
ஏற்றியும், கோயில்களைச் சூறையாடியும் பொருள் குவித்து வந்தான். அவன்
ஆயுளுக்கும் ஒரு முடிவு வந்தது (1685). அவனை யடுத்து அவன் மகன்
இரண்டாம் ஷாஜி தஞ்சாவூர்ச் சீமையின் மன்னனாகப் பட்டங்கட்டிக்
கொண்டான். திருச்சியில் ஆட்சி புரிந்து வந்த மங்கம்மாள் தஞ்சாவூரை
முற்றுகையிட்டு ஷாஜியை முறியடித்தாள். தஞ்சாவூர் 1694-ல் டில்லி
முகலாயர்களுக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டது.

     ஷாஜி வடமொழி இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கமளித்து
வந்தான். பல வடமொழிப் புலவர்களைப் புரந்து வந்தான்.

மதுரை நாயக்கர்கள் : சொக்கநாதன்

     சொக்கநாத நாயக்கன் இராமநாதபுரத்தை ஆண்டுவந்த கிழவன்
சேதுபதி என்பவனுடன் நட்புறவு கொண்டிருந்தான். கிழவன் சேதுபதியின்
மைத்துனன் இரகுநாதன் புதுக்கோட்டை மன்னனாக்கப்பட்டான். மதுரை
நாயக்கனுக்குத் தான் புரிந்த பேருதவிக்கு ஈடாகக் கிழவன் சேதுபதி
‘பராராசகேசரி’ என்ற பட்டம் வழங்கப்பெற்றான். சொக்கநாதனின் இறுதி
நாள்கள் துன்பந் தோய்ந்திருந்தன. அவனுக்கு நல்வாய்ப்புகள் ஒன்றேனும்
கிட்டவில்லை, அவன் நோக்கம் ஒன்றேனும் நிறைவேறவில்லை. வாழ்க்கையில்
ஏற்பட்ட ஏமாற்றங்களினாலும், நாட்டில் தோன்றிய பல பிளவுகளைக் கண்டு
அடைந்த ஏக்கத்தினாலும்