பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 479

தொடக்கத்தில், சென்னைக் கவர்னராக இருந்த பென்டிங் பிரபுவின்
உடன்பாட்டைப் பெற்றுக்கொண்டு பிரிட்டிஷ் படைகளின் தலைமைச்
சேனாதிபதி சர் ஜான் கிரேடாக் (Sir John Cradock) என்பவர்
இராணுவத்தில் சிப்பாய்களின் நடைமுறைக்குச் சில ஒழுக்க விதிகளைப்
பிறப்பித்தார். சிப்பாய்கள் தம் தாடியைக் களைந்துவிட வேண்டுமென்றும்,
மீசையை ஒரு புதிய முறையில் முறுக்கிவிட்டுக்கொள்ள வேண்டும் என்றும்,
நெற்றியில் திருநீறு, நாமம், பொட்டு முதலியவற்றை அணியக்கூடாதென்றும்,
காதுகளில் கடுக்கன் போட்டுக்கொள்ளக் கூடாதென்றும்
வற்புறுத்தப்பட்டார்கள். அஃதுடன் ஐரோப்பியர் அணியும் தொப்பியைப்
போன்று வடிவமைக்கப்பட்ட தலைப்பாகை ஒன்று அணியவேண்டும் என்றும்
அவர்கள் ஆணையிடப் பட்டனர். தம்மை வலுக்கட்டாயமாகக்
கிறித்தவராக்குவதற்கு ஆங்கிலேயர் முனைந்திருந்தனர் என்று சிப்பாய்கள்
அஞ்சினர். எனவே, புதிய இராணுவ ஒழுங்கு முறைகளை அவர்கள்
மும்முரமாக எதிர்த்தார்கள். அவர்களுடைய எதிர்ப்பு ஒரு பெருங்
கிளர்ச்சியாக வளர்ந்துவிட்டது. திப்புவின் மக்கள் கோட்டைக்குள்ளிருந்து இக்
கிளர்ச்சியைத் தூண்டிவிட்டனர் என்று கிரேடாக் கருதினார். ஆனால், சர்
தாமஸ் மன்றோ அவருடைய கருத்தை ஏற்கவில்லை. புதிய தலைப்பாகையே
கிளர்ச்சிக்குக் காரணம் என்று அவர் நம்பினார். அவர் குடிமக்களின்
எண்ணங்களை ஆராய்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தவர்.
சிப்பாய்கள் 1806ஆம் ஆண்டு திடீரென்று கிளர்ந்து எழுந்து நூறு
ஆங்கிலேயரைக் கொன்றுவிட்டனர். உடனே ஆர்க்காட்டிலிருந்து கர்னல்
கில்லஸ்பி (Col. Gillespie) என்பார் ஒரு படையுடன் வந்து கிளர்ச்சியை
ஒடுக்கினார். முந்நூறு சிப்பாய்கள் கொல்லப் பட்டனர். அஃதுடன் புதிய
ஒழுங்குமுறை விதிகள் ரத்து செய்யப்பட்டன. திப்புவின் மக்கள்
கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

     வடஇந்தியாவில் 1857ஆம் ஆண்டு மூண்டெழுந்த முதல் இந்தியச்
சுதந்தரப் போராட்டத்தை வேலூர்க் கிளர்ச்சியின் விளைவு அல்லது
தொடர்ச்சி என்று கூறுவர். அக் கருத்துக்கு அடிப்படை ஏதும் இல்லை.
சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயரால் பெயரிடப்பட்ட முதல் சுதந்தரப்
போராட்டம் மூள்வதற்கு முன்பு நாட்டில் பல வகையான அரசியல், சமய,
பொருளாதாரக் கொந்தளிப்புகள் காணப்பட்டன. அஃதுடன் அப்
போராட்டத்தில் பொதுமக்களும் இந்தியச் சிப்பாய்களுடன் கிளர்ச்சியில்
சேர்ந்துகொண்டனர். ஆனால், வேலூர்க் கிளர்ச்சியில் மக்கள் கலந்து
கொள்ளவில்லை.