பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 489

அரக்கோணம்-ராய்ச்சூர் பாதை 1871ஆம் ஆண்டிலும் ஜோலார்ப்பேட்டை-
மேட்டுப்பாளையம் இரயில்பாதை 1873ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்டன.
சென்னை-அரக்கோணம் இரயில் பாதை 1877ஆம் ஆண்டுக்குள் இரட்டைப்
பாதையாக்கப்பட்டது.

     சென்னை மாகாணத்துக்குத் தனி உயர்நீதி மன்றம் ஒன்று 1862,
1865ஆம் ஆண்டுப் பட்டயங்களின்படி அமைக்கப்பட்டது. தலைமை
நீதிமன்றமும் (Supreme Court) சிறிது காலம் உயர்நீதிமன்றத்தின் ஒரு
பிரிவாகவே செயல்பட்டு வந்தது. இப்போதுள்ள உயர்நீதி மன்றக் கட்டடங்கள்
அழகும் கவர்ச்சியும் வாய்ந்தவை; இவை 1889 ஆம் ஆண்டு தொடங்கிச் சில
ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டன. நீதிமன்ற மண்டபங்கள் வெள்ளை
கறுப்புச் சதுரக் கற்களால் பாவப்பட்டுள்ளன. பலவண்ணக் கண்ணாடிகளின்
மூலம் கதிரவனின் ஒளி மண்டபங்கட்குள் புகுந்து தனி ஒரு சோபையைத்
தருமாறு பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளன. தரையில் சிறு சிறு பூவண்ண
ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அப் பூக்களுள் ஒன்றைப்போலச்
செய்யப்பட்ட ‘ஐகோர்ட்டு’த் திருகாணிகள் பல ஆண்டுகள் பெண்களின்
காதுகளை அணிசெய்து வந்தன. சென்னையின் கலங்கரை விளக்கம் உயர்நீதி
மன்றத்தின் பல கோபுரங்களில் ஒன்றாகக் காட்சியளிக் கின்றது. அது
தரைமட்டத்திலிருந்து 160 அடி உயரம் உள்ளது.

சில தீய பழக்கவழக்கங்கள்

     வட இந்தியாவில் மக்களிடையே காணப்பட்ட சிசுக் கொலையும்,
உடன்கட்டை யேறுதலும் தமிழகத்தில் வழங்கி வரவில்லை. அவற்றை
அகற்றுவதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கண்டு
தமிழ்மக்கள் வெகுளவுமில்லை; கிளர்ந்தெழவுமில்லை. பல்லாயிரம்
ஆண்டுகளாகவே மாறுபட்ட அரசியல்களையும் பண்பாடுகளையும்
ஆங்காங்குத் தாம் ஏற்றுக்கொண்டு தம் வாழ்க்கையை வளப்படுத்திக்
கொள்வது தமிழ் மக்களின் இயல்பாக இருந்துவந்துள்ளது. தமிழர்கள்
புதுமையைப் புறக்கணிக்காதவர்கள்; ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப்
பன்னாட்டு மக்கள் தமிழ்நாட்டில் இடம் பெற்றுத் தமிழருடன் இணைங்கி
வாழ்ந்து வருகின்றனர். பல பெரும் சமயங்கள் தமிழகத்தில் இணைந்து
வளர்ந்து வந்துள்ளன. அச்சமயங்களின் கருத்துகளை எல்லாம் தம்
கருத்துகளாகவே மாற்றிக் கொண்டுவிட்டனர். அரசாளவும், சமயப் பணி
புரியவும், வாணிகம் செய்யவும், பல்வேறு கைத்தொழில்கள் புரிந்து
பிழைக்கவும் தமிழகம் புகுந்த அயல்நாட்டு மக்கள் தாமும்