| பொருளில் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் இது பயின்று வரக் காணலாம். ‘இப் படியன் இந் நிறத்தன்’ என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார். ‘ஏசும்படியோர் இளங்கொடியாய்’ என்னும் சொற்றொடரில் ‘படி’ என்பதற்கு அடியார்க்குநல்லார் ‘வடிவு’ என்று பொருள் கூறுகின்றார்.16 ‘பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்’17 எனச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்18 முறையே சாரணனது வடிவமும், விஞ்சையனின் வடிவமும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. படிமை என்னும் சொல் படிவம் எனவும் வழங்குவதுண்டு. ‘தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே’ என்று குறுந்தொகைச் செய்யுள் ஒன்றில்19 சொல்லாட்சியுண்டு. எனவே, படிமை என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லேயாகும்; அது பிராகிருதச் சொல்லன்று. இஃதே ‘படிமா’ என்று திரிந்து பிராகிருதத்தில் நுழைந்திருக்கக் கூடும். ஆகவே, படிமை என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியனாரைச் சமணர் என்று கூறுவது எவ்விதத்திலும் ஒவ்வாததாகும். தொல்காப்பியர் வகுத்த இலக்கண விதிகள் சிலவற்றைப் பரணர், கபிலர் போன்ற ஒருசில கடைச்சங்கப் புலவர்கள் கையாளவில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆகவே, கடைச் சங்கத்துக்கும் பிற்பட்ட காலத்தினர் தொல்காப்பியர் என்பது இவர்களுடைய வாதமாகும். கடைச் சங்கப் புலவர்களான புகழ் பெற்ற பரணரும் கபிலரும் ஒரு சொல்லாட்சியை வழக்கில் கொண்டு வந்திருந்தால் அவர்களுக்குப் பிற்பாடு வரும் ஓர் இலக்கண ஆசிரியர் அவ்விருவரின் சொல்லமைப்புக்கு இலக்கண விதிகள் வகுத்திருப்பர். வழங்கிவரும் இலக்கியத்துக்கு இலக்கண விதிவகுத்தலே இயல்பும் மரபுமாம். அப்படியாக, சங்கப் புலவர்கட்கு முரண்பாடாகத் தொல்காப்பியனார் இலக்கணம் கண்டிருக்கமாட்டார். எனவே, இவ்வெடுத்துக் காட்டைக் கொண்டே ஓர் உண்மையை அறியவேண்டியுள்ளது. தம் காலத்து வழங்கிய தமிழுக்குத்தான் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார் ; அவருடைய காலத்துக்குப் பிறகு தமிழரின் வாழ்க்கை விரிவுற்றது. வெளி உலகத் தொடர்பும் தமிழகத்துக்குக் கிடைத்தது. அவ்விரிவுக்குத் தக்கவாறு சொற்கள் பெருகின. சில சொற்கள் தொல்காப்பிய விதிகளுக்கு முரணாகவும் அமையலாயின. 16. சிலப். 9 : 16. 17. சிலப். 15 : 158. 18. மணிமே. 3 : 37. 19. குறுந். 156 |