| அறுக்க ஏகும் ஐயர்’21 என்றும், திருநாளைப் போவார் புராணத்தில் திருநாளைப்போவாரை ‘ஐயரே, ! அம்பலவர் அருளால் இப்பொழு தணைந்தோம்’22 என்றும் திருஞான சம்பந்த நாயனார் புராணத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரை, ‘ஐயர் நீர்’23 என்றும் குறிப்பிடுதல் சிறப்பாக நோக்கத் தக்கதாம். மக்களிலும் தேவர் உயர்ந்தவராகக் கருதப்படுவர். ஐயன் என்னும் சொல் கடவுளரையும் குறித்து நிற்பதுண்டு. சாத்தன் என்ற கடவுளை ஐயனார் என்று சிறப்பு விகுதியிட்டு அழைக்கின்றோம். ஐயன் என்பதன் பெண்பால் ஐயை. பெண்களுள் சிறந்தவரை முற்காலத்தில் ‘ஐயை’ என்று அழைப்பார். ‘ஐ’ வியப்பாகும் என்பது இலக்கண மரபு.24 ஐயன் வியக்கத்தக்க பெருடையவன் என்பது பொருள். பெண்பாலரிற் சிறந்தவர்கள் ‘ஐயள்’25 என்று அழைக்கப்பட்டனர். ஆரிய வேதியர் தென்னாட்டுக்கு வந்த பிறகு பார்ப்பார் என்றும், அவர்களுள் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகியவர்கள் அந்தணர் என்றும் அழைக்கப்பட்டனர். எனவே, ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்னும் நூற்பாவில் ஆளப்பெற்றிருக்கும் ஐயர் என்னும் சொல் மக்களிற் சிறந்த சான்றோரைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டுமே யல்லாது பிராமணரைக் குறிப்பாகக் கொள்ளுவதற்குச் சான்று ஏதும் இல்லை. சேர சோழ பாண்டிய மன்னர் மூவரையும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. அதனால் இந்நூல் சாலவும் பிற்பட்டதாக இருக்க வேண்டும் எனக் கூறுவர் கே. என். சிவராஜ பிள்ளை அவர்கள். இவர் கொண்டுள்ள முடிபானது வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் முரண்பாடானதாகும். காத்தியாயனர் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே சோழரைப்பற்றியும் பாண்டியரைப்பற்றியும் எழுதியுள்ளார். இம் மன்னரைப் பற்றிய குறிப்புகள் ஹதீகும்பாக் கல்வெட்டுகளிலும் (கி.மு. 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) வருகின்றன. எனவே, தொல்காப்பியர் தம் நூலில் அம் மூன்று மன்னரையும் குறிப்பிடுவதில் வியப்பேதுமில்லை. 21. பெரிய பு. கண். நாய. 70. 22. பெரிய. பு. திருநா. நாய 30. 23. பெரிய பு. திருஞான. 133. 24. தொல். சொல், உயிரியல், 87. 25. ஐங்குறு. 255. |