முன்னமே கடுங்காற்று வேகமாய்ச் சுழன்று வீசத் தலைப்பட்டது. விண்ணுக் கடங்காமல், வெற்புக் கடங்காமல் வீசிய காற்றின் வேகத்தால் மரங்கள் எல்லாம் மயங்கிச் சுழன்றன. அக்காற்றின் கொடுமைக்கு ஆற்றாது மலையே நிலை குலைந்தது. வெறி கொண்ட சூறையில் அகப்பட்ட வேங்கை மரம் வேரோடு சாய்ந்து அருகே சென்ற ஆற்றில் விழுந்தது. வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்து, செழுமையுற்று விளங்கிய வேங்கை நிலை குலைந்து வீழக் கண்ட எமதுள்ளம் வெதும்பியது; உலகப் பொருள்களின் நிலையாமையை நினைந்து நெஞ்சம் உலைந்தது. இவ்வாறு வேங்கை சாய்ந்து ஆற்றில் விழுந்த போது, அதனைச் சுற்றிப் படர்ந்திருந்த மெல்லிய கொடியும் வேரோடு பெயர்ந்து அம் மரத்துடன் மயங்கி விழுந்தது. அவ் வேங்கையில் இனிய தேனுண்டு திளைத்த வண்டுகள் மரத்தொடு பூவும் மாளக் கண்டு ஆர்ந்தெழுந்து அயல் நின்ற மற்றொரு மரத்தில் சென்று சேர்ந்தன. இதனை நோக்கிய போது மதுவுண்டு மயங்கும் வண்டின் இழிகுணம் எம் மனத்தை வாட்டி வருத்தியது, “காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர்- ஏலா இடர் ஒருவர் உற்றக்கால், ஈர்ங்குன்ற நாட!தொடர்புடையோம் என்பார் சிலர்” என்ற பாட்டின் பொருள் தெளிவாக விளங்கிற்று. கெடுமிடத்துக் கைவிடும் கருவண்டு போலாது, பெருந்துயர் நேர்ந்தபோதும் பிரியாத இயலமைந்த பூங்கொடி, நல்ல குடிப்பிறந்த நங்கைபோல் இலங்கிற்று. |