பக்கம் எண் :

கற்பனை இன்பம்127

இவற்றை   யெல்லாம் கண்டார் பரமசிவன், இன்னும் பேசாதிருந்தால்
பெருமோசம்      வந்துவிடும்     என்றுணர்ந்தார்;    சுந்தரத்தையும்,
அவருக்குப்   பின்னே   ஐந்தைந்து    பேராக   அணிவகுத்து  நின்ற
அடியாரையும் நோக்கி,  ‘தோழர்களே’  என்றார். அச்சொல்லைக் கேட்ட
தொண்டர்  குழாம்   ஆனந்தவாரியில்  மூழ்கிற்று. ‘தொண்டர் நாதனே
போற்றி!    அடியார்க்கு    எளியனே   போற்றி!’  என்ற  வாழ்த்துரை
எழுந்தது. ஆரவாரம் அமர்ந்தவுடன் பரமசிவன் பேசலுற்றார்:

“உங்கள்   தலைவனாகிய    சுந்தரன்    என்    தலை    சிறந்த
தோழன்.அவன்     அடியார்க்கு     அடியவன்.    தொண்டர்   படும்
துயரங்கண்டு    ஆற்றாது   வேகமாய்ப்    பேசினான்.   நாடெல்லாம்
பஞ்சத்தால்   நலியும்   பொழுது   நாம்  மட்டும்  வாட்டமின்றி  வாழ
முடியுமா?  எடுத்ததற்கெல்லாம்  வேலைநிறுத்தம் செய்வது ஏளனமாகும்.
கோடிக்கணக்கான   மக்கள்   குடிக்கக்  கஞ்சியின்றி வருந்துகின்றனரே!
ஒருசிலர்  பிறரை   வஞ்சித்து,   இருட்டுக்  கடையில்  திருட்டு வேலை
செய்வதை   நாம்   அறிவோம்.   இன்னும்  சில  நாளில்  நல்ல மழை
பெய்து,   நாடு   செழிக்கும்;  அறம் வளரும்; மறம் தளரும். அப்போது
உமது மனக் கவலை ஒழியும்” என்று திருவாய் மலர்ந்தார்.

அடியார் முகம்  மலர்ந்தது,.  “ஆண்டவன் கருணை வாழ்க, வாழ்க!”
என்று வாழ்த்தினார்.

“ஆழ்க தீயதெல்லாம்; அரன் நாமமே
சூழ்க; வையகமும் துயர் தீர்கவே”

என்று   பாடிக்கொண்ட   திரும்பினர்   அடியாரெல்லாம்.   பரமசிவன்
வீட்டில் பஞ்சத் தீபாவளி அமைதியாக நடந்தது.