பக்கம் எண் :

146தமிழ் இன்பம்

22. சேரனும் கீரனும்

தமிழ்நாடு   தன்னரசு  பெற்று  வாழ்ந்த  காலத்தில்  தமிழ்  மொழி
தலைசிறந்து  விளங்கிற்று. தமிழறிந்த  மன்னர்  ஆட்சியில்  முத்தமிழும்
முறையே வளர்ந்தோங்கித்  திகழ்ந்தது.  அறிவினைக் கொல்லும் வறுமை
வாய்ப்பட்டு வருந்திய  தமிழ்ப்  புலவர்களைத்  தமிழ் நயமறிந்த அரசர்
ஆதரித்துப் போற்றுவாராயினர்.

சேர   நாட்டை   ஆண்டுவந்த   பெருஞ்சேரல்   என்ற   அரசன்
ஆண்மையிலும்   வண்மையிலும்   சிறந்து  விளங்கினான். அம்மன்னன்
சோழ  நாட்டை  ஆண்ட  வளவனையும்,   பாண்டி  நாட்டை ஆண்ட
மாறனையும் வென்று  ஒளவைக்கு  நெல்லிக்கனி  அளித்த அதிகமானின்
வலியழித்துத்  தமிழுலகம்  போற்றத்  தனிக்   கோலோச்சி   வந்தான்.
சேரமானது  படைத்திறங்கண்டு  அஞ்சி,  அவனடி தொழுத முடிவேந்தர்
பலராயினர்.

இத்தகைய  கீர்த்தி,  வாய்ந்த  சேரமானது  கொடைத்  திறத்தினைக்
கேள்வியுற்ற   மோசிகீரனார்  என்ற  தமிழ்ப் புலவர், அம் மன்னனிடம்
பரிசு   பெற்றுப்   பசிப்பிணி   அகற்றக்   கருதி,   நெடுவழி  நடந்து
அரண்மனை  வாயிலை  நண்ணினார்.   அப்பொழுது   சேரமான்  ஓர்
அணிவிழாக்   காணுமாறு    வெளியே    சென்றிருந்தான்.   ஆயினும்
அரண்மனை  வாயில் அடையாதிருந்தமையால் கீரனார் இடையூறின்றி
உள்ளே சென்றார்.