பக்கம் எண் :

174தமிழ் இன்பம்

நிலையிலே     பதியைச்   சென்றடையும்.   அதுவே   வீடு  என்றும்,
மோட்சம்  என்றும்  சொல்லப்படும்.   பசுவாகிய  உயிர்,  பாசமென்னும்
கட்டறுத்துப் பதியுடன் இரண்டறக் கலந்துவிடுதலே வீடுபேறு ஆகும்.

இங்ஙனம்,     உயிர்  வர்க்கங்களை ஈடேற்றும் பொருட்டுக் கடவுள்
ஐந்து  தொழில்கள்  செய்கின்றார்   என்று   சைவ  சித்தாந்தம் கூறும்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,  அருளல்  என்னும்  ஐந்தும்
ஈசன் செயல்கள்.  இவ்வைந்து  தொழில்களுக்குமுரிய  சின்னங்களையும்
நடராஜ  வடிவத்தில்  நன்கு காணலாகும். அவ்வடிவத்தில்  உள்ள  ஒரு
கரம்   உடுக்கையடிக்கும்;   மற்றொன்று   அபயமளிக்கும்;   பிறிதொரு
கையில்  நெருப்பு  எரியும்;  இனி, திருவடிகளில்  ஒன்று  முயலகன்மீது
ஊன்றி   நிற்கும்;   மற்றொன்று  தூக்கிய   திருவடி.   இவ்  வைந்தும்
ஆண்டவன்   புரியும்   ஐந்து    தொழில்களையும்    காட்டுவனவாம்.
இறுதியாக   உள்ள    அருள்   புரிதல்  என்னும்   தொழில்,  எடுத்த
திருவடியால்  விளங்கும்.  எடுத்த   திருவடியே  பிறவியைக்  கெடுத்துப்
பேரின்ப  மளிப்பது.  ஆதலால்,   தில்லைச்  சிற்றம்பலத்தில்  காலைத்
தூக்கி  நின்றாடும் கடவுளைக் கண்டு காதலால்  கசிந்துருகிப்  பாடினார்
நாவரசர்:

“குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில்
                        குமின்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
                      பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும்
                       காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த
                       மாநிலத்தே”