பக்கம் எண் :

176தமிழ் இன்பம்

சித்தாந்த முறையில் சமயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை.

“சாத்தி ரம்பல பேசும்ச ழக்கர்காள்
கோத்தி ரமும்குல மும்கொண்டு என் செய்வீர்”

என்று வினவினார் ஓரு சைவப் பெரியார்.

“சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு”

என்று     மாணிக்கவாசகர்   திருவாசகத்திலே   பாடினார்.   எனவே,
கோத்திரமும்  குலமும்  கொண்டு,  நாம் ஆண்டவன் அருளை அடைய
முடியாது.  எக்  குலத்தவராயினும்  பக்குவப்பட்ட ஆன்மாக்களே பரகதி
அடைவர் என்று சைவ  சித்தாந்தம்  பறை யறைகின்றது. இக் காலத்தில்
இழிந்த  சாதிகள்  என்று  எண்ணப்படுகின்ற  குலங்களில் பிறந்தவர்கள்
பரிபக்குவத்தால்    முத்தியடைந்த   செய்தியைச்    சிவ   கதைகளால்
அறியலாம்.   புலையர்    குலத்தில்   பிறந்த   நந்தனார்,  புனிதமான
தில்லையம்பதியில்   சிவகதி  யடைந்தார்.  பெத்தான்  சாம்பான்  பத்தி
செய்து  முத்தி   பெற்றான்.   ஆதலால்,  ‘சாதியினும்  சீலமே சிறந்தது;
குலத்தினும் குணமே உயர்ந்தது’  என்னும்  உண்மை  சைவத்தில் அடிப்
படையாக   உண்டென்பது  நன்கு   விளங்குவதாகும்.   இதனாலன்றோ
தேவாரத் திருப்பாசுரத்தில்,

“அங்கமெல்லாம் குறைந்தழுகு தொழுநோயராய்
   ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கை சடைக்கரந்தார்க்கு அன்பராயின்
   அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே”

என்று பாடினார் திருநாவுக்கரசர்!