29, சோலைமலைக் கள்ளன்* தமிழ் நாட்டில் எத்தனையோ மலைகள் உண்டு. ஆயினும், மலையெல்லாம் சோலைமலை ஆகுமா? சோலைமலையைக் கண்டால் கண் குளிரும்; கருதினால் மனம் மகிழும்; அம்மலையிலுள்ள பெருஞ்சோலையைப் பசுஞ்சோலை என்பார்; பழம் உதிர்சோலை என்பார்; நறுஞ் சோலை என்பார். இன்னும் என்னென்னவோ சொல்லிப் புகழ்வார் செந்தமிழ்ப் பாமாலை பெற்ற சோலை மலையிலே மஞ்சு தவழும்; மழை பொழியும்; அருவி சொரியும்; ஆறாக ஓடும். ஆற்று நீர் கல்லின் இடையே பாய்ந்து செல்லும் போது ‘கலீர், கலீர்’ என ஒலிக்கும். அந்த ஓசையின் இனிமையால் சிலம்பாறு வலஞ்செய்யும்; சோலைமலையில் கல்லும் மரமும் கதை சொல்லும். முன்னொரு காலத்தில் அருகரும் புத்தரும் அம் மலையிலே தங்கியிருந்து தவம் புரிந்தார்கள். அன்னோர் இருந்த குகை இன்றும் மலைமீது காணப்படுகின்றது. இப்பொழுது ‘பஞ்ச பாண்டவர் படுக்கை’ என்பது அதன் பெயர். அங்கு ஏறிச் செல்வதற்குப் படியும் இல்லை; பாதையும் இல்லை. இடுக்கு வழிகளில் நுழைந்தும், வழுக்குப் பாறையில் தவழ்ந்தும் வடுப்படாமல் பஞ்சபாண்டவர் படுக்கையை அடைந்து விட்டால், நெஞ்சம் தழைக்கும்; தமிழ்த் தென்றல், ‘வருக’ என்று அழைக்கும்; தெள்ளிய சுனைநீர் தாகம் தீர்க்கும்.
* ஆனந்த விகடன் தீபாவளி மலரில் எழுதியது. |