பக்கம் எண் :

பாரதியார் பாட்டின்பம்243

தழைக்கின்றார்.    ஆயினும்,  நல்லறிவே  நாட்டின் உயிரெனக் கருதிய
அக்  கவிஞர்   தமிழ்   நாட்டிற்கு  என்றும் அழியாப் பெருமையளித்த
நல்லிறியற் கவிஞரை நாவார வாழ்த்துகின்றார்.

“கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு”

என்றெழுந்த   பாரததியார்  பாட்டின்  நயம் அறியத்தக்கதாகும்.  கல்வி
நலம்  படைத்த   தமிழ்   நாட்டிலே கம்பர் பிறந்தார்; இறவாத பெரும்
பனுவல்   இயற்றினார்.    தமிழ்   நாட்டிற்கு   அழியாத  பெருமையை
அளித்தார்; ‘கல்வியிற்  பெரியவர்  கம்பர்’ என்ற அழியாத புகழ் மாலை
பெற்றார்.   இத்    தகைய    கவிஞர்  அருளிய  காவியம்  செந்தமிழ்
நாட்டிற்குச்  சிறந்ததோர்  நல்லணியன்றோ?  இன்னும் இம் மாநிலத்தில்
வாழும்    மாந்தர்க்கென்று   ஒளிநெறி  காட்டும்  உயரிய  கவிஞரைப்
பிறப்பித்து நல்கிய பெருமையும் செந்தமிழ் நாட்டுக்கே உரியதாகும்.

“வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்றெழுந்த      பாரதியார்  வாய்மொழி   தமிழ்  நயமறிந்தோர்க்குத்
தேனினும்    இனிப்பாகும்.   திருவள்ளுவர்   என்னும்  மெய்ஞ்ஞானச்
செல்வர்   பன்னூற்றாண்டுகட்கு   முன்பு  இந் நாட்டிலே தோன்றினார்.
உலகெலாம்   இன்புற்று   வாழுமாறு  ஒளி  நெறி  காட்டினார்;  இன்று
உலகறிந்த   கவிஞருள்  ஒரு  தனிக்  கவிஞராக  ஒளிர்கின்றார்.  அக்
கவிஞர்   தென்னாட்டிற்   பிறந்தவராயினும்  எந் நாட்டிற்கும் உரியவர்;
அவர்      பொருளுரை     தென்மொழியில்    எழுந்த    தெனினும்
பன்மொழியாளர்க்கும் பொதுவுரையாகும்.