38. கலையின் விளக்கம் “அழகிய பொருளால் என்றும் அடைவது ஆனந்தமே” என்று ஆங்கில கவிஞர் ஒருவர் அருளிப் போந்தார். கண்ணினைக் கவரும் அழகையும், கருத்தினைக் கவரும் அறிவையும் தெய்வ நலங்களாகக் கருதி வழிபட்ட பெருமை பாரத நாட்டினர்க்கு உரியதாகும். அழகினைத் திருமகள் என்றும், அறிவினைக் கலைமகள் என்றும் கொண்டு பாரத முன்னோர் போற்றினார்கள். வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப் பணி பூண்டு, வெள்ளைக் கமலத்தே வீற்றிருக்கும் கலைமகளைப் பாரதியார் போற்றும் முறை சாலச் சிறந்ததாகும். இவ் வுலகில் வழங்கும் கலைகளைக் கவின்கலையென்றும், பயன்கலை என்றும் பகுத்துக் கூறுவதுண்டு. கண்ணையும் செவியையும் கவர்ந்து, அவற்றின் வாயிலாக மனத்திற்கு இன்பம் ஊட்டும் கலைகள் கவின் கலைகளாகும். மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் பல திறப்பட்ட பொருள்களை ஆக்கிக்கொள்வதற்குச் சாதனமாகிய கலைகள் பயன்கலைகள் எனப்படும். இவ்விருவகைக் கலைகளின் வடிவமாக நாமகள் விளங்குகின்றாள் என்னும் உண்மையைப் பாரதியார் நன்கு அருளிப் போந்தார். செஞ்சொற் கவி இயற்றும் கலைவாணர் கருத்திலும், உள்ளொளி வாய்ந்த உரவோர் மனத்திலும், |