பக்கம் எண் :

26தமிழ் இன்பம்

நன்கு     தெரியுமன்றோ?   சுருங்கச்   சொல்லின்  பயிர்த் தொழிலே
நாட்டின்   உயிர்த்  தொழில்.  அத்  தொழிலே  பொல்லாப்  பசியைப்
போக்கும்; நல்லறத்தைக் காக்கும்.

இத்தகைய     சிறந்த    தொழிலைச்      செய்யும்      உழவன்
பெருமையெல்லாம்   அவன்   உழைப்பின் பெருமையேயாகும். உழவன்
எந்நாளும்   உழைப்பவன்;    நெற்றி    வேர்வை   நிலத்தில்   விழ
வஞ்சமின்றிப்  பாடுபடுபவன்;    விளைநிலத்தை    உழுது பண்படுத்தி,
பருவத்தே  பயிர்  செய்து,  கண்ணுங்  கருத்துமாய்க் களை பறித்து, நீர்
பாய்ச்சி, பயன் விளைக்கும் உழவன்  பணியைப்   பற்றிய பழமொழிகள்
தமிழ் நாட்டிலே  பல உண்டு,  ‘உழுகின்ற காலத்தில் ஊர்வழி போனால்
அறுவடைக்  காலத்தில்  ஆள்தேட  வேண்டா’ என்பது ஒரு பழமொழி.
‘வயலில்  மோட்டை  போனால்  கோட்டை போச்சு’ என்பது மற்றொரு
பழமொழி.  கண்ணினைக்  காக்கும்  இமை  போல் பயிரினைக் காத்துப்
பயன் விளைவிப்பவன் உழவன் என்பது இப்பழமொழிகளின் கருத்து.

‘உழவன்     உழைப்பாளன்’  என்பது  அவன் தொழிலைக் குறித்து
வழங்கும்  ஒரு  சொல்லாலே  விளங்கும்.    இக்காலத்தில்  விவசாயம்
என்பது  உழவுத் தொழிலைக் குறிக்கிறதல்லவா?   அச்சொல் வடசொல்.
உழைப்பு     என்பதே     அச்சொல்லின்      பொருள்.     மற்றத்
தொழில்களைவிட்டுப்   பயிர்த்தொழிலை  மட்டும்   விவசாயம்  என்ற
சொல்  ஏன்  குறிக்கின்றது?  தமிழ்  நாட்டார்   உழவனது உழைப்பே
உழைப்பு  என்று  கருதியதாலன்றோ  உழவுத்  தொழிலுக்கு விவசாயம்
என்று பெயரிட்டனர்?