“வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்” என்பது அவர் தேவாரம். இப் பாட்டால் வேளாளர் சிறந்த உழைப்பாளர் என்பதும், கொடையாளர் என்பதும் நன்கு தெரிகின்றன. பயிர்த் தொழில் செய்வதற்கு ஏர் இன்றியமையாதது. ஏரில்லாத உழவனுக்கு ஏற்றமில்லை. “ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய் நீரருகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச் சென்று வரஅணித்தாய் செய்வாரும் சொற்கேட்டால் என்றும் உழவே இனிது. என்ற பாட்டு, சிறு குடியானவனுக்கு வேண்டுவனவற்றைக் கூறுகின்றது. குடிகளுக்குச் சீரும் சிறப்பும் ஏரால் வரும் என்பது தமிழ்நாட்டார் கொள்கை. ‘சீரைத் தேடின் ஏரைத் தேடு’ என்று பணித்த நாடு தமிழ்நாடு. ஏரே நிலத்தைச் சீர்படுத்துவது. ஏரே பசிப்பிணியை வேரறுப்பது, ஏரே இனிமை தருவது, இன்பம் பயப்பது. இத்தகைய ஏரை அழகிய பொருளாகக் கண்டனர் பழந்தமிழர். ஏர் என்ற சொல்லுக்கு அழகு என்னும் பொருள் பண்டைத் தமிழில் உண்டு. அழகுடைய இளங்கிளியை ’ஏர் ஆர் இளங்கிளியே’ என்று அழைத்தார் மாணிக்கவாசகர். ஏரில் என்ன அழகு உண்டு? கோணல் மாணலாக, கட்டை நெட்டையாக, கரடு முரடாக இருப்பதன்றோ ஏர்? இத்தகைய கருவியால் அழகைக் கண்டதுதான் தமிழர் பெருமை ! தமிழர் பண்பாடு ! கண்ணுக்கு இன்பம் தருவது ஒன்றே அழகு என்று கொண்டாரல்லர் பண்டைத் தமிழர். கருத்துக் கினிய |