முன்னாளில், ‘சொன்ன சொல் தவறாதவர்’ என்ற பெருமை வேளாளருக்கு இருந்தது. “ஊழி பேரினும் பெயரா உரையுடைய பெருக்காளர்” என்று வேளாளரைப் புகழ்ந்து பாடினார் கம்பர். அன்னார், வாய்மையை உயிரினும் அருமையாகப் போற்றி வாழ்ந்தனர். இதற்கு ஒரு சான்று கூறுவன்: தொண்டை நாட்டுத் திருவாலங்காட்டுக்கு அருகே பழையனூர் என்ற மூதூர் உள்ளது. அங்கே எழுபது வேளாளர் முற்காலத்தில் அறநெறி வழுவாது வாழ்ந்து வந்தனர். அவர்கள், வழிப்போக்கன் ஒருவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வண்ணம் நெருப்பில் இறங்கி உயிர் நீத்தார்கள். அச் செய்தி தமிழக முழுவதும் பரவியிருந்தது. “மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகன் உயிரிழப்பத் தாங்கள் கூறியசொல் பிழையாது துணிந்து செந்தீக் குழியில்எழு பதுபேரும் முழுகிக் கங்கை ஆறணிசெஞ் சடைத்திருஆ லங்காட் டப்பர் அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ்மெய்ப் பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால் பிரித்தளவிட்(டு) இவளவெனப் பேச லாமோ” என்ற ஆன்றோர் பாட்டிலே இவ் வரலாறு குறிக்கப்படுகின்றது. இவற்றையெல்லாம் இப்பொழுது நாம் மறந்து விட்டோம். தமிழ் நாட்டு மாணவன் ஒருவனை நோக்கி, “சொன்ன சொல் தவறாதவர் யார்” என்று வினவினால், ‘பழையனூர் வேளாளர்’ என்ற பதில் வருமா? அவர் பெருமைதான் அவனுக்குத் தெரி யாதே! அரிச்சந்திரன் பெயர் தெரியும்; அவன் கதை தெரியும். |