இனி, சேரநாடு என்று பழங்காலத்தில் பெயர் பெற்றிருந்த மலையாள நாட்டிற்கும், ஈழ நாட்டிற்கும், பல வகையான தொடர்பிருந்து. மலையாள நாட்டில் இன்று ஈழவர் என்று அழைக்கப்படுகின்ற வகுப்பார் இலங்கையிலிருந்து அந்நாட்டில் குடியேறியவரேயாவார். ஈழவர் என்ற சொல்லே அவர் ஈழநாட்டிலிருந்து வந்தவர் என்பதை உணர்த்துகின்றது. செங்குட்டுவன் என்னும் சிறந்த சேரமன்னன் மலையாள நாட்டில் அரசு வீற்றிருந்த பொழுது தமிழ் நாட்டில் அரும்பெருஞ் செயலொன்று நிகழ்ந்தது. கற்பின் செல்வியாகிய கண்ணகி, பாண்டிய மன்னனைத் தன் கற்பின் திண்மையால் வென்று, சேர நாட்டையடைந்து தெய்விகமுற்றாள். இந்த நிகழச்சி மூன்று தமிழ் நாட்டையும் அதிரச் செய்தது. சேர நாட்டு அரசன் தன் நாட்டில் வந்து தெய்விகமுற்ற வீரபத்தினியாகிய கண்ணகிக்குச் சிறந்த திருக்கோயில் ஒன்று அமைத்தான். அக்காட்சியைக் காண்பதற்கு அயல்நாட்டு மன்னர் பலரைச் செங்குட்டுவன் அழைத்திருந்தான். அன்னவருள் ஒருவன் ஈழநாட்டு மன்னன், “கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னன்’ என்று சிலப்பதிகாரத்தில் அவ்வரசன் குறிக்கப்படுகின்றான். இலங்கை வரலாற்றில் கஜபாகு என்ற பெயருடைய மன்னர் இருவர் இருந்தனர் என்றும், அவருள் முதல் கஜபாகு மன்னனே செங்குட்டுவன் அழைப்பை யேற்றுக் கண்ணகிவிழாவிற் கலந்துகொண்டவன் என்றும் வரலாற்று நூலோர் கூறுவர். தமிழகத்திற் கோயில் கொண்ட கண்ணகியின் பெருமையையும் கருணையையும் கண்கூடாகக் கண்ட கஜபாகு மன்னன் இலங்கையிலும் அத்தேவிக்கு ஆலயமமைத்து, சிறப் |