5, தமிழ் இசை விழா* தலைமையுரை பெரியோர்களே ! அன்பர்களே !! இந்நாள் தமிழ் மக்களுக்காக ஒரு நன்னாள் ஆகும். சென்னை மாநகரில் பத்தாண்டுகளாகச் சிறந்த பணியாற்றி வரும் தமிழிசைச் சங்கம், இன்று ‘அண்ணாமலை மன்றம்’ என்னும் அழகிய கலைக்கோவிலில் அமர்ந்து காட்சி யளிக்கின்றது. மன்றம் என்ற தமிழ்ச்சொல்லைக் கேட்பது செவிக் கின்பம்; அதன் பொருளை அறிவது சிந்தைக்கு இன்பம். பழந்தமிழ் மொழியில் மன்றம் என்பது ஊர் நடுவே யுள்ள பொதுவிடமாகும். இன்று தமிழகத்தின் தலைநகராகிய சென்னையம்பதியின் நடுவே, தமிழரின் சீர்மைக்கு ஒரு சான்றாக நிற்கும் இம் மாளிகை, தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவுடைமையாதலால் இதனை மன்றம் என்று அழைப்பது சாலவும் நன்றே. தமிழ் நாட்டில் எல்லையற்ற பெருமை வாய்ந்த தில்லையம்பதியின் அருகே பல்கலைக் கழகமொன்று நிறுவி, பாரத நாட்டுக்கலை வரலாற்றில் நிலையான ஓர் இடம் பெற்றுப் புகழுடம்பில் வாழும் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் தமிழார்வமும் தலையாய வள்ளன்மையும் இக்கலை * தமிழ் இசைச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா சென்னை அண்ணாமலை மன்றத்தில் 15-1-53- இல் நடைபெற்றது. |