பக்கம் எண் :

62தமிழ் இன்பம்

9, திருக்குற்றாலம்

தென்றல்     அசைந்து    வரும்  தென்  தமிழ்நாட்டில்  அமைந்த
திருக்குற்றாலம்,     மலைவளம்      படைத்த    பழம்    பதியாகும்.
அம்மலையிலே,    கோங்கும்   வேங்கையும்  ஓங்கிவளரும்;  குரவமும்
முல்லையும்   நறுமணங்  கமழும்; கோல மாமயில் தோகை விரித்தாடும்;
தேனுண்ட     வண்டுகள்     தமிழ்ப்    பாட்டிசைக்கும்.   இத்தகைய
மலையினின்று     விரைந்து     வழிந்து    இறங்கும்    வெள்ளருவி
வட்டச்சுனையிலே    வீழந்து    பொங்கும்   பொழுது   சிதறும்  சிறு
நீர்த்திவலைகள்   பாலாவிபோற்   பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்ந்து
கொஞ்சிக்  குலாவும்.  அவ் வருவியில்  நீராடி இன்புற்ற மேலைநாட்டுப்
பெரியார்  ஒருவர்,   ‘இந்  நானிலத்தில்   உள்ள நன்னீர் அருவிகளுள்
தலைசிறந்து  குற்றால  அருவியே  என்று கூறுதல் மிகையாகாது!’ என்று
புகழ்ந்துரைத்தார்,*

வேனிற்காலத்தில்      திருக்குற்றால   மலையில்  வீசும்  மெல்லிய
பூங்காற்று மருந்துச்  செடிகொடிகளின்  நலங்களைக் கவர்ந்து வருதலால்
நலிந்த  உடலைத்   தேற்றும்   நன்மருந்தாகும்;   சலித்த உள்ளத்தைத்
திருத்தும்   சஞ்சீவியாகும்.   பயன்   மரம்   நிறைந்த  திருக்குற்றாலச்
சாரலில் வேரிலே  பழம்பழுத்து,  தூரிலே சுணை வெடிக்கும் குறும் பலா
மரம் ஒன்று  தொன்றுதொட்டு  விளங்குகின்றது. அப்பழுமரம் திருஞான
சம்பந்தர்


 

* History of Tinnevelly by Bishop Caldwell.