பக்கம் எண் :

இயற்கை இன்பம்67

10. பழகு தமிழ்

தமிழகத்தில்     பல  நாடுகள்  உண்டு; பல குலங்கள் உண்டு. ஒரு
நாட்டுத்  தமிழுக்கும்   இன்னொரு   நாட்டு தமிழுக்கும் வேற்றுமையே
இல்லை  என்று  கூற  முடியாது. ஒரு  குலத்தார் பேசுந்தமிழ் மற்றொரு
குலத்தார்  பேசுந்  தமிழை  எல்லா   வகையிலும்  ஒத்திருக்கும் என்று
சொல்ல முடியாது.

பந்தல்  என்ற  சொல்லின் ஆட்சியைப் பார்ப்போம்;திருமணத்திற்குப்
பந்தல்   போடும்   வழக்கம்   இந்நாட்டில்  சாலப்  பழமை வாய்ந்தது.
காவிரிப்பூம்   பட்டினத்திலே   செல்வக்  குடியிற் பிறந்த கண்ணகிக்கும்
கோவலனுக்கும்  முத்துப்பந்தலிலே  திருமணம் நிகழ்ந்தது. “மாலை தாழ்
சென்னிவயிரமணித்   தூணகத்து   நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்”
என்று   அப்பந்தலைச்   சிலம்பு  பாடிற்று.  கோடையிலே  வழிநடந்து
செல்வார்க்கு  நீரும்   நிழலும்  தரும்   பந்தலைத்  தண்ணீர்ப் பந்தல்
என்பர்.

இத்தகைய     மேன்மையான  சொல்  தனவணிகர்  நாடு  என்னும்
செட்டிநாட்டிலே   அமங்கலச்   சொல்லாகக்  கருதப்படுகின்றது. பந்தல்
என்பது   அந்நாட்டிலே   மணப்   பந்தலைக்  குறிப்பதில்லை; பிணப்
பந்தலையே  குறிக்கும்.  இழவு   வீட்டில்  போடுவது பந்தல்; கல்யாண
வீட்டில்  போடுவது காவணம்  அல்லது கொட்டகை.