பக்கம் எண் :

காவிய இன்பம்81

என்னும்     முத்தமிழில்   இயற்றமிழ்,   இனிய   சொற்களால் மாந்தர்
அறிவினைக்  கவர்ந்து உயரிய   இன்பம் அளிப்பதாகும். இசைத் தமிழ்,
செவியின்   வாயிலாக  உள்ளத்தைக்    கவர்ந்து  உலப்பிலா  இன்பம்
பயப்பதாகும்.  நாடகத்  தமிழ்,   இயற்றமிழின்    அழகையும்,  இசைத்
தமிழின்  சுவையையும் காட்சியின்  நலத்தோடு   கலந்தளித்து மனத்தை
மகிழ்விப்பதாகும்.    நாடகசாலைக்குச்  செல்வோர்,  மணிமுடி  தரித்த
மன்னரும்,   மதிநலஞ்    சான்ற  அமைச்சரும்,  வெம்படை  தாங்கிய
வீரரும், நல்லணிபுனைந்த   நங்கையரும்,  பிறரும் அரங்கத்தில் நடிக்கக்
கண்டு  களிப்புறுவர்; பண்ணார்ந்த   பாட்டின்  இசைகேட்டு இன்புறுவர்;
நாடகக்  கதையில்    அமைந்துள்ள  கருத்தினை  அறிந்து நலமுறுவர்.
இவ்வாறு  கற்றோர்க்கும்    மற்றோர்க்கும் இன்பமும் பயனும் ஒருங்கே
எய்துவிக்கும்   தன்மையாலேயே     தமிழ்நாட்டு   அறிஞர்   நாடகத்
தமிழைப் போற்றி வளர்ப்பாராயினர்.

மாந்தரை     ஓழுக்க நெறியில்    நிறுத்துதற்கு நாடகம் ஒரு சிறந்த
கருவியாகும்   என்பர்.   நல்ல   நாடகங்களைக்     காணும்   மக்கள்
அறத்தாறறிந்து   ஓழுகத்  தலைப்படுவர்.    உயிர்க்கு  நலம்  பயக்கும்
உயரிய  உண்மைகளைக்  கொண்ட    கதைகளே  முற்காலத்தில் நாடக
மேடைகளில்       நடிக்கப்பட்டமையால்,    மக்கள்,    பெரும்பாலும்
நன்மையில்    நாட்டமும்,      தீமையில்    அச்சமும்   உடையராய்
வாழ்ந்தார்கள்.  ஆனால்,  இக்    காலத்தில்,  புன்னெறிப்  பட்டோரை
இன்புறுத்திப்   பொருள்  கவரும்    நோக்கமே  பெரும்பாலும்  நாடக
சாலையை இயக்குகின்றது. அதனாலேயே,   தற்காலத்தில் நாடகங்களைக்
காண்பதுவும் தீதென்று தக்கோர் கருதுகின்றனர்.