இதோ, என் கையில் உள்ளது! இதனுள்ளே அமைந்த பரல் மாணிக்கம்” என்று திறம்பட உரைத்தாள். அப்பொழுது, மன்னவன் மனம் பதைத்து, தன் காவலாளர் கோவலனிடமிருந்து கொணர்ந்த சிலப்பினை எடுத்துவந்து, கண்ணகியின் முன்னே வைத்தான். அச் சில்லரிச் சிலம்பைக் கண்ணகி தன் செங்கையால் எடுத்து நோக்கிக் காவலன் கண்ணெதிரே உடைத்தாள். சிலம்பின் உள்ளே இருந்த மாணிக்கம் விரைந்தெழுந்து அரியணை மீதமர்ந்திருந்த அரசனிடம் தானே நேராகச் சான்று பகர்வதுபோல் அவன் முகத்தில் தெறித்து விழுந்த மாணிக்கத்தைக் கண்டான் மன்னன். அந்நிலையில் அவன் வெண்குடை தாழ்ந்தது; செங்கோல் தளர்ந்தது. ‘பொற் கொல்லன் சொற் கேட்டுப் பிழை செய்த யானோ அரசன்? யானே கள்வன்; இதுகாறும் என் வழிமுறையில் இத்தகைய பிழை செய்தார் எவருமிலர். இன்றே என்னுயிர் முடிவதாக’ என்று அவன் மயங்கி மண்மீது விழுந்தான். விழுந்த மன்னன் எழுந்தானல்லன். “தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன் ‘பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்! மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது; கெடுகஎன் னாயுள்’ என மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே” என்று சிலப்பதிகாரம் இரங்கிக் கூறுகின்றது. காவலன் மயங்கி விழுந்து மாண்டதைக் கண்ட கோப்பெருந்தேவி, கணவனை இழந்து நின்ற கண்ணகியின் அடி பணிந்து பிழை பொறுக்குமாறு வேண்டினாள். |