பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்129

“குட(மேற்கு)மலைத்தொடர், கடலில் அமிழ்ந்துபோன தென்னாட்டை நோக்க வடக்கிலுள்ளமையால், இவ் வெள்ளத் துன்பத்திற்குமுன், வடமலைத்தொடர் எனப்பட்டது. மனு வின் பேழை வடமலைத்தொடரில் தங்கிற்றென்று சதாபத பிராமணமும், திராவிட நாட்டரசன் மலையமலையில் தவஞ் செய்து கொண்டிருந்தானென்று புராணங்களும் கூறுகின்றன....”

“மனுவின் சரிதையை முதன்முதற் கூறும் சதாபத பிராமணம், வடமலைத்தொடரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும், வடமலைத்தொடர் என்றது மேற்குத் தொடர்ச்சி மலையையே என்றும், பேழை தங்கிய இடம் மலையமலையே என்றும் கொள்வதற்குப் போதிய புராணச் சான்றுகள் உள்ளன” என்று பண்டிதர் டி. சவரிராயன் (M.R.A.S.) கூறுகின்றார்.1

தமிழ்நாட்டில் நெட்டிடையிட்ட மூன்று அழிவுகள் தோன்றினமையின், ஈரழிவிற் கிடைப்பட்ட காலப்பகுதியை ஓர் ஊழியென்றும், மூவழிவுகளால் ஏற்பட்ட காலப்பகுதிகளை நாலூழி (சதுர்யுகம்) யென்றும் கொண்டதாகத் தெரிகின்றது. ஊழிகட்குக் குறிக்கப்பட்ட அளவுகளும், நாலூழியைச் சுற்ற ளவாகக் கொண்டதும் பிற்காலத்தன என்று தோன்றுகிறது.

ஊழி என்னுஞ் சொல் ஊழ் என்னும் பகுதியடியாய்ப் பிறந்து, முதிர்வு அல்லது அழிவு என்று பொருள்படுவது. ஊழியால் ஏற்படும் கால அளவை ஊழியென்றது ஆகு பெயர். தமிழ்நாட்டில், நாள்முதல் ஊழிவரையுள்ள கால அளவுகளெல்லாம், ஒவ்வொரு வகையில் ஈரழிவிற் கிடைப் பட்ட காலத்தையே உணர்த்துவனவென்பதை, யான் 'செந் தமிழ்ச் செல்வி'யில் வரைந்துள்ள 'பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை' என்னும் கட்டுரையிற் கண்டுகொள்க.

தெற்கேயே பல அழிவுகள் தோன்றியுள்ளமையாலும், பண்டைத் தமிழரெல்லாம் இந்துமாக் கடலில் அமிழ்ந்து போன தென்னாட்டிலேயே புதையுண்டு அல்லது எரியுண்டு கிடப்பதாலும், கூற்றுவன் தென்றிசையிலிருக்கிறானென்றும், தம் முன்னோரைத் தென்புலத்தாரென்றும் கூறினர் தமிழர். புலம்-நிலம்.

தெற்கே பெருநிலமும் பெருமலையும் கடலில் அமிழ்ந்து போனதினாலும், இதற்கு மாறாக வடக்கே கடலாயிருந்த பாகத்தில்,


1. கருணாமிர்தசாகரம், 1 ஆம் பாகம், பக். 26.