பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்169

“பன்னிரண்டாவன : பிரமம் முதலிய நான்கும், கந்தருவப் பகுதியாகிய களவும் உடன்போக்கும், அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், காமக்கிழத்தியும், காதற் பரத்தையும் அசுரம் முதலாகிய மூன்றும்” என்பது.

இங்ஙனம், இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஆரியத் தைக் கலந்துணர்ந்தமையாலேயே தொல்காப்பியத்தின் உண் மைப் பொருளைக் காணமுடியாது போயினர். அக்காலத்தில், சரித்திரம், குலநூல், மொழிநூல் முதலிய கலைகளில்லாமை யால், அவர்மீதும் குற்றஞ் சுமத்தற்கிட மில்லை.

இனி, மேற்கூறிய களவியல் நூற்பாக்கட்கு உண்மைப் பொருள் வருமாறு :

கைக்கிளைக்குறிப்பு மூன்றும், ஐந்திணையும் பெருந் திணைக் குறிப்பு நான்குமாகப் பாங்கன் நிமித்தம் பன்னி ரண்டாம்.

“காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தலும்;
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்தலும்;
சொல்லெதிர் பெறாஅன் சொல்லிஇன் புறலும்”

(அகத். 53)

(ஆகிய மூன்றும்) புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. இவையே, “முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே” என்று சுட்டப்பட்டவை. மூன்று நிகழ்வுகள் ஒரு புணர்சொற்றொட ரில் (Compound Sentence) இணைத்துக் கூறப்பட்டுள என்க.

“ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே”

(அகத். 54)

இவையே, “பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே” என்று சுட்டப்பட்டவை. 'முன்னைய', 'பின்னர்' என்னும் முறையையும், 'மூன்றும்' 'நான்கும்' என்னுந் தொகைகளையும் ஓர்ந்தறிக.

அன்பின் ஐந்திணை வெளிப்படை. யாழோர் என்றது, இசையிற் சிறந்த, இல்லற வொழுங்கற்ற ஓர் ஆரிய வகுப் பாரை. யாழ் இசை. யாழோரைக் கந்தருவர் என்பர் வடநூலார்.