(4) யாத்தசீர் என்பது, பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்றவாறு. (5) அடியென்பது, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தா வதோர் உறுப்பு. (6) யாப்பு என்பது, அவ் வடிதொறும் பொருள் பெறச் செய்வதொரு செய்கை. (7) மரபு என்பது காலமு மிடனும்பற்றி வழக்குத் திரிந்தக் காலுந் திரிந்தவற்றுக்கு ஏற்ப வழுப்படாமைச் செய்வதோர் முறைமை. (8) தூக்கு என்பது, பாக்களைத் துணித்து நிறுத்தல். (9) தொடைவகை யென்பது, தொடைப்பகுதி பலவு மென்றவாறு. (10) நோக்கு என்பது, மாத்திரை முதலாகிய உறுப்புகளைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல். (11) பா என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. (12)அளவியல் என்பது, அப்பா வரையறை. (13) திணை யென்பது, அகம் புறமென்று அறியச் செய்தல். (14) கைகோள் என்பது, அவ்வத் திணை யொழுக்க விகற்பம் அறியச் செய்தல்..... (15) கூற்றுவகை யென்பது, அச் செய்யுள் கேட் டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல்... (16) கேட்போர் என்பது, இன்னார்க்குச் சொல்லு கின்றது இதுவெனத் தெரித்தல். (17) களன் என்பது, முல்லை குறிஞ்சி முதலாயின வும் இரவுக்குறி பகற்குறி முதலாயினவும் உணரச் செய்தல்.... (18) காலவகை யென்பது, சிறுபொழுது பெரும் பொழுதென்னுங் காலப்பகுதி முதலாயின.
|