தெய்வமுற்றோன், ஞஞ்ஞையுற்றோன், உடன்பட்டோன், உறங்கினோன், துயிலுணர்ந்தோன், செத்தோன், மழை பெய்யப் பட்டோன், பனித்தலைப்பட்டோன், வெயிற்றலைப் பட்டோன், நாணமுற்றோன், வருத்தமுற்றோன், கண்ணோ வுற்றோன், தலைநோவுற்றோன், அழற்றிறப்பட்டோன், சீதமுற்றோன், வெப்பமுற்றோன், நஞ்சுண்டோன் என 24 வகைகளையுடையது. இவற்றை இன்னும் மலையாள நாட்டுக் கதகளியிற் காணலாம். அவிநயத்திற்குரிய கை இணையாவினைக்கை (பிண்டி, ஒற்றைக்கை), இணைக்கை (இரட்டைக்கை, பிணையல்) என இருவகை. இவற்றோடு ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கை என நான்கைக் கூட்டுவாருமுளர், இணையாவினைக்கை பதாகை முதல் வலம்புரியீறாக 33 வகைப்படும். இணைக்கை அஞ்சலி முதல் வருத்தமானம் ஈறாக 15 வகைப்படும். இனி, அவிநயக்கை எழிற்கை, தொழிற்கை, பொருட்கை என மூன்றாகவும் வகுக்கப்படும். நாடகமாடும் சாலை அரங்கு எனப்படும். இச் சொல் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து, அறை என்னும் பொருளையுடையது. அறையை அரங்கு என்பது இன்றும் தென்னாட்டு வழக்கு. அரங்கிற் கட்டும் திரை எழினி யெனப்படும். மேல் எழுந்து செல்வதால் எழினி யெனப்பட்டது. அது ஒருமுக வெழினி (ஒருபுறத்தினின்று இழுப்பது), பொருமுக வெழினி (இரு புறத்தினின்றும் இழுக்கும்), இரட்டைத்திரை. கரந்து வரல் எழினி (மேனின்று கீழிறங்கி வருவது) என மூவகைப் படும். வடநூல்களில் ஒரேயொருவகைத் திரைமட்டும் கூறப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. நாடகம்பற்றிய பிற விலக்கணங்களை யெல்லாம், அடியார்க்குநல்லார் அரங்கேற்று காதைக் குரைத்த வுரை யினின்றும் அறிந்துகொள்க. இசையிலும் நாடகத்திலும் இதுபோது வழங்கும் வடசொல் மிகுதியைக் கண்டு, இவை ஆரியக்கலைகளோ என்று ஐயுறற்க.
|