பக்கம் எண் :

முன்னுரை 23

தோல்மேலாடையும், நாரினாலும் ஆட்டு மயிராலும் ஆன அரையாடையும், புல்லினாற் பின்னிய அரைஞாணும், வில்வம் முள்முருங்கை முதலிய முல்லை மரங்களில் வெட்டிய ஊன்று கோலும் ஆரிய முதல் மூவரணத்தாருக்கு மனு விதித்திருப்பதும் மேற்கூறியதை வற்புறுத்தும்.

ஆரியர் இந்தியாவிற்குள் நுழையுமுன்பே, வடஇந்தியர் நல்ல நாகரிகத்தை யடைந்திருந்தார்கள். சர் ஜாண் மார்ஷல் மொகஞ்ஜோ-தாரோவைப்பற்றிப் பின்வருமாறு வரைகிறார்:

“5000 ஆண்டுகட்கு முன்பு ஆரியப் பெயரையே கேள்விப்படுமுன், இந்தியாவில், மற்ற நாடுகளுமில்லா விடினும், குறைந்தது பஞ்சாபும் சிந்தும் மிக முன்னேறியதும் இணையற்றபடி ஓரியலானதும், சமகால மெசொப்பொத்தாமிய எகிபதிய நாகரிகத்திற்கு மிக நெருங்கியதும், சிலவிடங்களில் அதினும் சிறந்ததுமான ஒரு சொந்த நாகரிகத்தை நுகர்ந்து கொண்டிருந்தனவென்று, ஒருவராயினும் ஒருசிறிதும் இது வரை நினைத்ததேயில்லை. எனினும், இதையே ஹரப்பா, மொகஞ்சோ-தாரோ என்னுமிடத்துக் கண்டுபிடிப்புகள் ஐயமறத் தெரிவித்திருக்கின்றன. கிறித்துவுக்கு 3000 ஆண்டு கட்கும் 4000 ஆண்டுகட்கும் முற்பட்ட சிந்து மக்கள், ஆரியவுறவின் அடையாளமே யில்லாததும், நன்றாய்ப் பண் படுத்தப்பட்டதுமான ஒரு நாகரிகத்தை யடைந்திருந்ததை அவை காட்டுகின்றன. இங்ஙனமே, அங்குள்ள தொழிற் கலையும் மதமும் சிந்துப் பள்ளத்தாக்கிற்கே யுரியவும் தனிப் பட்ட தன்மையுடையனவுமாகும். அங்குள்ள சிறிய மண்ணுருப்படிகளான ஆடுகட்கும் நாய்கட்கும் பிற விலங்கு கட்கும், முத்திரைகளிலுள்ள ஓவிய வெட்டுகட்கும், அக்காலத்து மற்ற நாடுகளில் நமக்குத் தெரிந்ததொன்றும் மாதிரியில் ஒத்ததாயில்லை. அம் முத்திரைகளிற் சிறந்தவை, கவனிக்கத் தக்கபடி, திமிலும் குறுங்கொம்புங் கொண்ட காளைகளாகும். அவை வேலைப்பாட்டின் விரிவினாலும், இதுவரை வெட்டோவியக் கலையில் பெரும்பாலும் மேற்கொள்ளப்படாத உண்மையுருவப் படிவ உணர்ச்சியினாலும், பிறவற்றினின்றும் விதப்பிக்கப் பெற்றவை. அதுவுமன்றி, ஹரப்பாவில் தோண்டியெடுக்கப்பட்டுப் பத்தாம் பதினொராம் தட்டுகளிற் பொறிக்கப்பட்டுள்ள இரு