பக்கம் எண் :

230ஒப்பியன் மொழிநூல்

அகரம் மருதநிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு. பார்ப் பனர் மருதநிலத்தில் தங்கினதினாலேயே, அவர் குடியிருப்பு அக்கிரகாரம் எனப்பட்டது. அக்கிர + அகரம் = அக்கிரா கரம். அக்கிரம் = நுனி, முதல், தலைமை.

“அகர மாயிரம் அந்தணர்க் கீயிலென்”

என்றார் திருமூலர்.

E. acre, A.S. aceer, Ger. acker, Gk. agros, L. ager Skt. ajra.

கல் = தோண்டு. கல் + வி = கல்வி. கல்வி என்னும் பெயர் முதலாவது தோண்டுதல் என்னும் பொருளில் உழவைக் குறித்தது. பின்பு, நூற்கல்விக்குச் சிறப்புப் பெயராயிற்று. மாந்தன் முதன்முதற் கற்ற கல்வி உழவே. கல் - colo, to till.

தொழில் என்னும் பெயரும் முதலாவது உழவையே குறித்தது. தொள் + இளல் = தொளில் - தொழில்.

ஒ.நோ : பொள் + இல் = பொளில் - பொழில். பொள் - பொளி. பொளித்தல் வெட்டுதல். (பொள் - பொழ்) பொள்ள (வெட்ட)ப்படுவது பொழில். பொழில் = சோலை. பண்டைத் தமிழகம் முழுவதும் பெருஞ்சோலையாய் அல்லது காடாயி ருந்தது. காடுவெட்டி நாடாக்கப்பட்டது. அகத்தியர் காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந்தமை நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க.

தமிழகம் முழுதும் ஒரு பெருஞ்சோலையாயிருந்ததினா லேயே பொழில் என்னும் பெயர் உலகம் அல்லது நாடு என்று பொருள் படுவதாயிற்று. 'நாவலந் தண்பொழில்' 'வண்புகழ் மூவர் தண் பொழில்', 'ஏழ்பொழில்' என்னும் வழக்குகளை நோக்குக.

தொள் = தோண்டு. தொள் - தொடு = தோண்டு. தொள்- till, to cultivate. தொள்ளுவது தொழில்.

மாந்தன் முதலாவது செய்த பெருந்தொழில் உழவே. உழவின் பெயரான தொழில் என்பது, பிற்காலத்தில் எல்லாத் தொழில்கட்கும் பொதுப்பெயராயிற்று.

செய் = வயல். செய்வது செய். நன்செய், புன்செய் என்னும் பெயர்களை நோக்குக. செய்கை = வயல்வேலை. பண் = செய். பண்ணுவது பண்ணை. பண்ணை = வயல்.