“ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதிய லகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்கசுவா கா” என்று பாடி அவனை உயிர்ப்பித்தார்.1 நக்கீரர் பார்ப்பாரேயாயினும், நடுவுநிலைமையும் வாய் மையும் தமிழ்ப்பற்றும் உடையவராதலின், ஆரிய வொழுக்கத்தை அறவே விட்டுவிட்டுத் தமிழவொழுக்கத்தை மேற்கொண்டார். தமிழின் தொன்முது பழமையையும், அதற்கு இடையிடை நேர்ந்த பல பெருந் தீங்குகளையும் நோக்குமிடத்து, நச்சினார்க்கினியர், பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாத்திரியார்) போன்ற ஆரியப் பார்ப்பனர் இல்லாதிருந்திருப்பின், தமிழ் மிகக் கெட்டுப் போயிருக்கும். (2) திருவள்ளுவர் “அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்”, | (குறள். 30) |
“எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”, | (குறள். 110) |
“ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்”, | (குறள். 133) |
“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”, | (குறள். 134) |
“அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று”, | (குறள். 259) |
“ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் கிரவின் இளிவந்த தில்”. | (குறள். 1066) |
முதலிய பல குறள்கள் ஆரியவொழுக்கத்தைக் கண்டிப்பன வாகும்.
1. இங்குக் கூறிய குயவன் அபார்ப்பனனேனும், 'வடமொழி தென் மொழி'ப்போர் பார்ப்பனராலேயே உண்டானதாதலாலும், இக் காலத்திற் போன்றே அக்காலத்தும் இவ்விரு மொழிக்கும் இகல் இருந்ததென்று தெரிவித்தற்கும், இச் செய்தி இங்குக் கூறப்பட்டது.
|